இந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

இந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை, மாநில முதல்வர்கள் பங்கேற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது:
பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் நாம் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என சிந்திக்க வேண்டும். இதற்காக ஒரு மாநிலம், மற்ற மாநிலத்துடன் புரிந்துணர்வு மேற்கொண்டு, இணைந்து செயல்பட கேட்டுக் கொள்கிறோம்.
உதாரணத்திற்கு தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் வளமையான, தொன்மை வாய்ந்த மொழி. இந்தியாவின் வளமையை பறைசாற்றுவதற்கான சான்றாக தமிழ் மொழியைக் குறிப்பிடலாம். ஆனால், நமக்கு தமிழைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் உள்ளது.
எனவே, நமது மாநிலங்களில் ஏதாவது ஒன்று தமிழக அரசுடன் ஓராண்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த மாநில மாணவர்களுக்கு தமிழ்ப் பாடல்களை, வாக்கியங்களை கற்றுக்கொள்ள செய்யலாம்.
ஹரியாணா மாநிலம் தெலங்கானாவுடனும், குஜராத் சத்தீஸ்கருடனும், மேற்கு வங்க மாநிலம் அஸாம் உடனும் இணைந்து செயல்படுவது போல், இந்த முயற்சியை நாம் பலப்படுத்தி நாட்டின் வளமையைப் பறைசாற்ற வேண்டும். இதை நாம் புறக்கணிக்கக்கூடாது.
தமிழ் மொழியை நாம் பேசும்போதும், பேசக் கேட்கும்போதும், அதனை உணரும்போதும் நமக்கு வியப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.