ஆராய்ச்சி மணி

Advertisements

திருச்சியில் டீ கடைக்காரர் ஒருவர், வாடிக்கையாளர்களின் மன நிறைவை அறிந்துகொள்ளும் வகையில், தன்னுடைய கடை வாசலில் ‘ஆராய்ச்சி மணி’ கட்டி வைத்துள்ளார்.

“எந்த ஒரு நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர் என்பவர் மிகவும் முக்கியமானவர், அவர் நம்மை சார்ந்திருக்கவில்லை, நாம்தான் அவரை சார்ந்திருக்கிறோம்” என்றார் மகாத்மா காந்தி.

இதற்கு உதாரணமாக, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்படும் டெல்லி சர்பத்- பாலு டீ ஸ்டால் உரிமையாளர் பாலசுப்ரமணியத்தைச் சொல்லலாம். இவர், தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் மன நிறைவை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் கடை வாசல் முன் வெண்கல மணி ஒன்றை கட்டித் தொங்க விட்டுள்ளார்.

இவரது கடையில் சாப்பிட்டவை மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்றால் வெளியே செல்லும்போது மணியை ஒரு முறை அடித்துவிட்டுச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள். திருப்தி ஏற்படாதவர்கள் மணி அடிக்காமல் சென்றுவிடுகின்றனர்.

பனங்கற்கண்டு பால், இஞ்சி டீ, டெல்லி சர்பத் உட்பட பல்வேறு பொருட்கள் விற்கும் இவரது கடையில் பீடி, சிகரெட் போன்ற புகையிலை விற்பதில்லை.

இதுதவிர, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் நகைச் சுவையாக பேசிக்கொண்டே இருக்கும் பாலசுப்ரமணியம், “சாப்பிட்டது நன்றாக இருந்தால் மணியை அடித்துவிட்டுச் செல்லுங்கள், இல்லையென்றால் சரியாக டீ, சர்பத் போடாத என்னை அடியுங்கள்’’ என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

இதுகுறித்து பாலசுப்ரமணியம் கூறியதாவது:

மக்களின் குறை தீர்க்க அரண்மனை வாசலில் ஆராய்ச்சி மணியைத் தொங்கவிட்ட மனுநீதிச் சோழ மன்னர்தான் எனக்கு முன்னுதாரணம். 15 ஆண்டுகளாக இந்த கடையை நடத்தி வருகிறேன்.

வாடிக்கையாளர்களின் குறையைத் தீர்க்க முடிவெடுத்து, 5 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆராய்ச்சி மணியை கடை வாசலில் கட்டினேன்.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் வெளியே செல்லும்போது எழுப்பும் மணியோசை காதில் விழுந்தால் தான் என் மனது நிறைவடையும். யாரேனும் மணி அடிக்காமல் சென்றால், சாப்பிட்டதில் எது பிடிக்கவில்லை, என்ன குறை என்று கேட்டு அடுத்த முறை வாருங்கள் சரியாகிவிடும் என்று தெரிவிப்பேன்.

சில கடைகளில் புகார் பெட்டி அல்லது குறிப்பேடு வைத்திருப் பார்கள். இந்த நடைமுறைகளால் வாடிக்கையாளரின் மனதில் இருப்பதை அறிவது கால தாமதமாகும். ஆராய்ச்சி மணி என்றால் உடனே தீர்வு கிடைத்துவிடும். கடமைக்கு ஒரு பொருளை விற்றுவிட்டோம் என்று இல்லாமல் வாடிக்கையாளர் திருப்தி அடைந்தார் என்பதை அறிந்தால்தான் செய்யும் தொழில் சிறக்கும். வாடிக்கையாளரை ஏமாற்றத் தோன்றாது.

இந்த நடைமுறையை அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பின்பற்றினால் வாடிக்கையாளர்- வர்த்தகர் உறவு மேம்படும், வியாபாரம் செழிக்கும் என்றார்.

பாலசுப்ரமணியம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com