உங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்

Advertisements

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. அசதியுடன் படுத்து அரைத் தூக்கத்தில் எழுந்து புத்தகப் பையைத் தேடும் பிள்ளைகளுக்கு இன்னும் சில வாரங்களுக்கு அந்த அவதியிலிருந்து விடுதலை.

விடுமுறை தொடங்குவதற்கு முன்பே, ‘இந்தி படிக்கிறியா… டான்ஸ் கிளாஸ் போறியா… கம்ப்யூட்டர் கிளாஸா?” என்று பிள்ளைகளை நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள் நம்மவர்கள். என்ன செய்வது, அத்தனையையும் நம் பிள்ளைகள் படித்துவிட வேண்டும் என்கிற அவசரம் அவர்களுக்கு!

“எதற்காக இந்த அவதியும் அவசரமும்? இயந்திரத்தனத்தி லிருந்து இந்த ஒரு மாதத்துக்காவது அவர்களை யதார்த்தமாக இருக்கவிடுங்கள்” என்கிறார் மதுரை இளமனூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் மகேந்திரபாபு. “எல்லோரும் கிராமத்திலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். அதேபோல் கிராமங்களும் நகரங்களைப் போல ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் தாத்தா, பாட்டி அத்தை மாமா, சித்தி இதுபோன்ற உறவு முறைகளெல்லாம் அறுந்துபோச்சு. இயற்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது போல, நம் பிள்ளைகளுக்கு உறவுகளைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கு. அதுக்காகவாவது இந்த ஒரு மாதத்துக்குப் பிள்ளைகளைக் கிராமத்துப் பக்கம் கூட்டிப் போங்கள். உறவுகளோடு உறவாட வைத்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அந்தக் காலத்தில் நீங்கள் உங்களது சொந்தக் கிராமத்தில் எப்படியெல்லாம் இருந்தீர்கள் என்பதை நேசமாக அருகிலிருந்து உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். உங்கள் உறவுகளை அவர்களுக்கும் நெருக்கமாக்குங்கள்” என்கிறார் மகேந்திரபாபு.

ஐபேடையும் ஐபோனையும் படிக்கத் தெரிந்த நகரத்துப் பிள்ளைகளில் பலர் நெல் மரத்திலிருந்து காய்க்கிறதா, செடியில் விளைகிறதா என்று தெரியாமல்தான் எதிர்கால இந்தியாவைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் காலையும் மாலையும் காலாற கிராமத்து வயல் வரப்பில் நடக்க வைத்து உழவின் கதை சொல்லலாம். மதிய வேளையில் கோடைக்கு இதமான இளநீர், பதநீர், நுங்கு உள்ளிட்டவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தலாம்.

பனை மரத்தைத் தமிழகத்தின் மரம் என்கிறார்கள். ஆனால், நம் பிள்ளைகள் பலர் அந்த மரத்தைப் பார்த்தே இருக்க மாட்டார்கள். கண்மாய் கரையில் நிற்கும் பனை மரத்தின் மகிமையை அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். நகரத்தில், இயற்கைக்குக் கேடு உண்டாக்கும் நெகிழிப் பைகளைப் பயன்படுத்தியே பழகிப்போன பிள்ளைகளுக்குக் கிராமத்துக் கடைகளில் ஓலைக் கொட்டானில் விற்கும் கருப்பட்டி மிட்டாயை வாங்கிக்கொடுத்துச் சுவைக்கச் சொல்லுங்கள். அப்படியே அந்தக் கொட்டானின் பிறப்பையும் இயற்கையைக் காயப்படுத்தாத அதன் உழைப்பையும் அவர்களுக்கு மெதுவாகப் புரிய வையுங்கள்.

சொந்தக் கிராமத்துக்குப் போக முடியாத நகரத்துவாசிகளா நீங்கள்? கொஞ்சமும் தயங்க வேண்டாம். விடுமுறையில் உங்கள் பிள்ளை களைப் புத்தகக் கடைகளுக்குக் கூட்டிச் செல்லுங்கள். அங்கேயும் உங்களது விருப்பத்தை அவர்கள்மீது திணிக்காமல் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள்; விலை சற்று அதிகமாக இருந்தாலும் யோசிக்காதீர்கள். குறிப்பாக, சிறுவர் இலக்கியப் புத்தகங்களை வாங்கித்தந்து அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தலாம்.

பொறியியல் மாணவர்கூட, வங்கிப் படிவம் எழுதத் தெரியாமல் திணறுவதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். எனவே, உங்கள் பிள்ளைகளை வங்கிகளுக்குக் கூட்டிச்சென்று இப்போதே அதன் நடைமுறைகளைப் பற்றிப் பொறுமையாகச் சொல்லிக்கொடுங்கள். காலை நேரத்தில் அருகிலுள்ள உழவர் சந்தைக்குப் பிள்ளைகளைக் கூட்டிச் செல்லுங்கள். அங்கே, கட்டு ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் கீரை வகைகளை அறிமுகப்படுத்தி அவற்றின் அருமைகளை அறியச் செய்யுங்கள். முடிந்தால் உங்கள் வீட்டிலோ மொட்டை மாடியிலோ சின்னதாய் ஒரு தோட்டம் போடவைத்து உழைப்பின் உயர்வைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்.

நிறைவாக ஒன்று… நம்மால் சீரழிக்கப்பட்ட இயற்கை இப்போது நம்மை சினம் கொண்டு தாக்குகிறது. அதனால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி, இயற்கையோடு ஒன்றி வாழும் பறவைகளையும் விலங்குகளையும் பெருமளவில் பாதித்துக்கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டு மொட்டை மாடியில் உங்கள் குழந்தைகளை ஒரு பாத்திரத்தில் தினமும் கொஞ்சம் தானியமும் இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரும் வைக்கப் பழக்குங்கள். குருவிகள் வந்து அந்தத் தானியத்தைக் கொத்திவிட்டுத் தண்ணீரை அருந்துவதைப் பார்க்கையில் உங்களது மனம் லேசாகும். உங்கள் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனிதநேயம் வளரும்.

You may also like...

Leave a Reply