பங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு
பங்கனப்பள்ளி வகை மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டுப் பதிவகத்தில், ஆந்திர மாநில தோட்டக்கலை துறை சார்பில் இதற்கான புவிசாப் குறியீட்டிற்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. பங்கனப்பள்ளி மாம்பழம் தொடர்பாக அந்த மனுவில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்மான தகவல்கள்:
பங்கனப்பள்ளி மாம்பழங்கள் ஆந்திரத்தில் ஒரு நூற்றாண்டிற்கு மேல் சாகுபடிச் செய்யப்பட்டு வருகின்றன. கர்னூல் மாவட்டத்தில் பங்கனப்பள்ளி நகரம் உள்ளது. பங்கனப்பள்ளி மாம்பழங்கள் பெனேசான், பனேசன், பெனிசான், சப்பத்தை, சபேஃடா, பங்கன்னப்பள்ளி, பங்கினப்பள்ளி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பருவநிலை மற்றும் புவியியல் தன்மையால் தனித்துவமான சுவையுடன் இவ்வகை மாம்பழங்கள் விளங்குகின்றன.
ஆந்திர மாநிலத்தில் மட்டும் சுமார் 7.68 லட்சம் விவசாய குடும்பங்கள் பங்கனப்பள்ளி மாம்பழச் சாகுபடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. வருடத்திற்கு 24.35 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் விளைகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், வளைகுடா நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கு 5,500 டன் மாம்பழங்கள் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. கடந்த 2011 -ஆம் ஆண்டு வருவாயில் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் விற்பனை ரூ.1461 கோடியை எட்டியதுடன், ரூ.20.68 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு சுற்று விவாதங்களுக்குப் பின் பங்கனப்பள்ளி மாம்பழத்திற்கு புவிசார் குறியீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மாம்பழங்கள் தோட்டக்கலை பொருட்களுக்கான பிரிவில் வகை – 31 இல் தேர்வாகி மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதாக, சென்னை புவிசார் குறியீட்டு பதிவாளர் ஓ.பி.குப்தா தெரிவித்தார்.