‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’

Advertisements

Karnan1

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்திருக்கிறார் சர்ச்சைக்குரிய நீதிபதி சி.எஸ்.கர்ணன்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியான அவருக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையேயான மோதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ள நீதிபதி கர்ணன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்றத்தின் 8 நீதிபதிகளும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைப் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் வகையில் கூட்டாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும், தலித் நீதிபதியான என்னை நீதித் துறையின் அதிகாரத்தையும், நிர்வாகத்தையும் தவறாகப் பயன்படுத்தி துன்புறுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, நீதித்துறையையும் அவர்கள் அவமதித்திருக்கிறார்கள்.
எனவே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹரும், அவரது தலைமையிலான அமர்வில் இடம்பெற்றுள்ள தீபக் மிஸ்ரா, ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர், பினாகி சந்திர கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும் இந்த தண்டனை விதிக்கப்படுகிறது.
மேலும், நீதிமன்றப் பணிகளைத் தொடர்வதற்கு எனக்குத் தடை விதித்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஆர்.பானுமதிக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. தவிர, நீதிபதிகள் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். அந்தத் தொகையை, உத்தரவு கிடைத்த ஒரு வாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் அவர்கள் செலுத்த வேண்டும்.
இதற்கு முன்பு, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி விதித்த ரூ.14 கோடி அபராதத்தை நீதிபதிகளின் ஊதியத்தில் இருந்து உச்ச நீதிமன்றப் பதிவாளர் பிடித்தம் செய்ய வேண்டும். இதுதவிர, ரூ.2 கோடி அபராதத் தொகையை நீதிபதி பானுமதி உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி கர்ணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவர்கள் குழு கடந்த வாரம் சென்றபோது, அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply