கொல்லிமலை ரகசியம்

Advertisements

 

Image may contain: mountain, sky, outdoor and nature

கொல்லிமலை ரகசியம் மற்றும் மர்மங்கள்

அபூர்வ மூலிகைகள்… சிறுதானியங்கள்… கொல்லிமலை சொல்லும் ரகசியங்கள்!

கூடுவிட்டு கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்று தான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மூலிகை பூமி. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். வளமான 16 மலை நாடுகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதுமான இம்மலை நாட்டிலும், நவநாகரீக புதிய கலாச்சாரங்கள் மூக்கை நுழைத்தாலும் இரண்டு விஷயங்களை அதற்கு விட்டுக் கொடுக்காமல் பழமை காத்து வருகிறார்கள்.

ஆயிரக்கணக்கில் உள்ள அபூர்வ மூலிகைகளை காப்பாற்றி அழியாது பாதுகாத்து வருகிறார்கள். தினை, கேழ்வரகு, சாமை ஆகிய பாரம்பரிய சிறுதானியங்களை பல நூறு ஏக்கரில் பழைய விவசாய முறைகளை மேற்கொண்டு செய்து வருவது.

வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு, ஆலந்தூர் நாடு, குண்டுனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு, பள்ளப்பாடி நாடு, புதுக்கோம்பை நாடு ஆகிய எழில் கொஞ்சும் 16 நாடுகளில் விளைந்து கிடக்கிறது ஆயிரக்கணக்கான மூலிகைகளும், ஆதி காலத்து சிறுதானியங்களும். அதில் ஜோதிப்புல், சாய்ந்தாடும் பாவை,கருநெல்லி, சிவப்பு கற்றாழை, கருவாழை,சிவப்புக்கடுக்காய், ரோம விருட்சம் ஆகியவை குறிப்பிடதக்கவை.

ஜோதிப்புல்

இந்த புல் ஒன்றை பிடுங்கி தீயில் பற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடிய விடிய சுடர் விட்டு வெளிச்சம் தருமாம். இன்றும் இந்த மலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலருக்கு இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல் தானாம்.

இதேபோல் ரோம விருட்சம் என்கிற மரத்தின் இலைகளை அரைத்து 45 நாட்கள் தலையில் தேய்த்து, கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்துவர தலை முடி உதிர்வது உடனே நின்று, கருகரு முடியை பெறலாமாம். இந்த இலையின் சாற்றை தவறியும் கை, கால் உள்ளிட்ட உடம்பின் வேறு பகுதியில் தேய்த்து குளிக்கக் கூடாது, அந்த சாறு பட்ட இடங்களில் முடிவளர தொடங்கி விடுமாம்.

கொல்லிமலையில் உள்ள அடர் வனங்களில் இயற்கையில் விளையும் ஒரு வாழைதான் கால்வாழை, இதன் பழத்தை இரண்டு மண்டலம் (96 நாட்கள்) சாப்பிட்டு வர, பெருத்த தேகம் கொண்டோர் இளைத்து சராசரியான தேகத்தை பெறுவார்களாம்.

ஆளை மறைக்கும் ஆதள மூலிகை

இந்த மூலிகை செடியின் இலையை கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியும். அந்தப்பாலுடன் கரும் பூனையின் முடி, இவைகளுடன் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத்தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்பு தகடு எந்திரத்தினுள் இட்டு மூடி, அதை வாயினுள் போட்டு அதக்கி, மறைய நினைக்க யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்களை மாயமாக மறையச்செய்யும் அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த ஆபூர்வ மூலிகையின் சக்தியினால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. ஆக, இதுபோன்ற அபூர்வ மூலிகைகள் ரகசியங்கள் சொல்லத் தீராது.

ஆயுளைக்கூட்டும் சிறுதானியங்கள்

கொல்லிமலை 16 நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான். என்னதான் வீரிய ஒட்டுரகங்கள், மரபணு மாற்று விதைகள் என்று நவீன விவசாயம் ஆட்டிப்படைக்கும் சூழலிலும் மலைமேல் அதுக்கெல்லாம் வேலையில்லீங்க என்கிறார்கள் இங்குள்ள மக்கள். கேழ்வரகு, தினை, சாமை ஆகிய இந்த மூன்று சிறுதானியங்களை பல நூறு வருடங்களாக பல நூறு ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்கள்.

டிராக்டர், ரசாயன உரம், பூச்சி மருந்து என்று பசுமைப்புரட்சி பக்கம் தாவி விடாமல், பாரம்பரிய விவசாயத்தை கைவிடாமல் ‘பழமைப்புரட்சி‘ செய்து வருகிறார்கள் இந்த மக்கள். ஏர் பிடிப்பது, பாத்தி அமைப்பது, விதைப்பது, அறுப்பது, மாடுகளை வைத்து தம்பு அடிப்பது, தூற்றுவது, மூட்டை பிடிப்பது, வீடு கொண்டு வருவது என்று அனைத்து விவசாயப் பணிகளையும் மனிதர்களும், மாடுகளுமே பார்த்து கொள்கின்றனர். அதே சமயம் பழமையான விவசாயம் செய்தாலும், விற்பனை விஷயத்தில் பல புதுமைகளை புகுத்தி வருகின்றனர் இம்மக்கள்.

கொல்லிமலை சுற்றுலாத்தலம் ஆதலால் வருடம் தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து போய்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கும் சிறுதானிய உணவு போய்சேர வேண்டும் என்கிற நோக்கத்தில், இங்குள்ள மலைவாழ் பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் குழுக்கள் அமைத்து, அதன் மூலம் கொல்லிமலையின் பிரதான இடமான செம்மேடு பேருந்து நிலைய அங்காடியில் வைத்து சிறுதானிய மாவு விற்பனை செய்து வருகிறார்கள். அதோடு தினை முறுக்கு, ராகி மால்டு, காரவடை போன்ற மதிப்புக்கூட்டிய பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அபூர்வ மூலிகைகளும், ஆரோக்கியமான காற்றும், மாசில்லா தண்ணீரும், நோய் எதிர்ப்பு ஆற்றலும், பலமும் கொடுக்கும் சிறுதானியங்களும் கொண்டதுதான் கொல்லிமலை… அதன் ரகசியமும் இதுதான். ஆயுளைக்கூட்ட ஒரு முறை அந்த அதிசய மலைக்கும் வந்து பாருங்களேன்

LikeShow More Reactions

Comment

You may also like...

Leave a Reply