எஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்
ஹிலாரி கிளிண்டன் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பான விசாரணையை கையாண்ட விதம் தொடர்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநரான ஜேம்ஸ் கோமியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்காவை வெள்ளை மாளிகை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஆனால், டிரம்பின் அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கும், ரஷ்யாவுக்கும் தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது தொடர்பாக எஃப்பிஐ அமைப்பு விசாரித்து வந்ததால்தான் ஜேம்ஸ் கோமி நீக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் வெளியுறவு செயலராக ஹிலரி கிளிண்டன் பணியாற்றிய போது சில ரகசிய தகவல்களை அவர் கையாண்ட விதம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஜேம்ஸ் கோமி இது குறித்து தவறான தகவல்களை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜேம்ஸ் கோமிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ”எஃப்பிஐ பணியக அமைப்பை கோமியால் திறம்பட தலைமையேற்க முடியவில்லை’ என்ற அமெரிக்க அட்டார்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸின் பரிந்துரையை தானும் ஏற்றுக்கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.