ஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி?

Advertisements

ஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி?

நுண்நொதுமி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் நுண்நொதுமி என்கின்ற இந்தச் சொல்லை நான் நாளை உங்களிடம் கேட்டால் உங்களுக்கு நினைவு இருக்குமா? உங்களில் பெரும்பாலானவர்கள் இந்தச் சொல்லை நாளை என்ன, இன்றே சில நிமிடங்களில் மறந்துவிடுவீர்கள். ஆனால், இப்படியான கஷ்டமான சொற்களை எப்படி மனப் பாடம் பண்ண முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆராய்ச்சிகள் ஊடாக நிரூபிக்கப் பட்ட இந்த முறையை நீங்களும் அறிய விரும்பினால், கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்!

விஷயத்துக்குப் போக முதல், நான் ஆரம்பத்தில் கூறிய வார்த்தை என்னவென்று உங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா? இல்லையா…? சரி பரவாயில்லை, அந்தச் சொல்லை மட்டும் இல்லை எதிர்காலத்திலும் கூட அனைத்துச் சொற்களையும் எப்படி 100% நினைவில் வைத்திருப்பது என்பதை இப்பொழுது பார்ப்போம். இதைப் பற்றி பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், ஆய்வுக் கூடங்களிலும் ஆராய்ச்சிகள் நடாத்தப்பட்டது, ஆனால் ஒரு புதிய சொல் ஒன்றை மறந்து விடாமல் இருப்பதற்கு ஒரு இலகுவான முறையை கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். அது எப்படி என்றால், ஒரு புதிய சொல்லை நாம் 14 நிமிடங்களில் 160 தடவை கேட்டாலே போதுமாம். அந்தச் சொல் உடனடியாக மூளையில் பதிவாகி அதை மறந்துவிட மாட்டோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் நினைப்பது போல் அந்தச் சொல்லை உங்கள் வாயால் சொல்லக்கூடத் தேவையில்லை. அதை உங்கள் காதுகளால் கேட்டால் மட்டுமே போதும். அப்படிக் கேட்கும் போது உங்கள் மூளை கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சொல்லை நீங்கள் மறக்காத மாதிரி பதித்து விடும்.

இது ஒரு இலகுவான முறை அல்லவா? எனவே, என்னைப் போல் மறதி அதிகமாக இருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வழியாக அமைந்திருக்கிறது. அது சரி, நான் ஆரம்பத்தில் கூறிய அந்த நுண்நொதுமி என்றால் என்ன தெரியுமா? அது வேறு ஒன்றுமே இல்லை, Neutrino என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். ஆனால், இதைப் பற்றி நான் இன்னுமொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

சரி நண்பர்களே, நீங்கள் அனைவருமே இன்று நான் கூறிய இந்தச் சொற்களை மறக்காமல் இருப்பதற்கான முறையை முயற்சித்துப் பார்த்துவிட்டு, உங்கள் அனுபவங்களையும், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!

thanks(Dr. Niroshan Thillainathan)

You may also like...

Leave a Reply