அ.தி.மு.க. ஒராண்டு ஆட்சி நிறைவு சாதனையா? வேதனையா? – நா.இராதாகிருஷ்ணன்

Advertisements

வெற்றிகரமாக தனது ஒராண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது அ.தி.மு.க. நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்பார்கள்  அது போல் தத்தி தத்தி தனது ஒராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஒராண்டில் நடந்த நிகழ்வுகள் தமிழக முன்னேற்றத்திற்கு உகந்ததாக இருந்ததா, மக்கள் நல அரசாக செயல்பட்டதா என்பதே கேள்வி?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைவான  மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சித் தொடர்ந்த ஆ.தி.மு.க. கடந்த ஒராண்டிற்குள் மூன்று முதல்வர் மாற்றத்தைக் கண்டுள்ளது.

உடல் நலம் குன்றிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா முதல் ஓ.பன்னீர் செல்வம் முதல் இப்போதைய இடப்பாடி வரை அடங்கும்.

அ.தி.மு.க. பதவியேற்றவுடன் சில நாட்களிலே முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட ஆட்சியும், அதிகாரமும் முடங்கிப்போனது.

அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து முதல்வர் எப்போது வருவார், கோப்புகள் எப்போது கையெழுத்தாகும் என்ற கேள்விகள் தினம் பட்டிமன்றம் நடத்தப்பட்டன. பிறகு ஒருவழியாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்பின் அப்பாடா என்று பெருமூச்சு விட்டது தமிழகம். அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, மீண்டும் அரசு நிர்வாகத் தேக்கம். யார் அடுத்த முதல்வர் என்ற கேள்வியில் அரசு அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் அரசு நிர்வாகம் ஓடியது.

மீண்டும் பன்னீர்.  தமிழக மக்கள் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். சில மாதங்களுக்கு பிறகு அ.தி.மு.க. கட்சி களேபரத்தில் பன்னீர் போய் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அதிகாரம். கட்சி இரண்டானது, மீண்டும் தமிழகத்தில் நிர்வாகப் பதட்டம். இந்த ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? கவர்னர் என்ன முடிவு எடுக்கப் போகிறார். ஆட்சி கவிழ்பா, ஜனாதிபதி ஆட்சி அமலா என்று பட்டிமன்றம்.

பிறகு கவர்னர் முடிவு, சட்டசபையில் மெஜாரிட்டி பரிட்சை, சபாநாயகரை நீக்க பலப்பரிட்சை என்று எல்லா சோதனைகளிலும் வென்று அ.தி.மு.க. தன்னை தக்க வைத்துக் கொண்டதைத் தான் சாதனை என சொல்லாமே தவிர மக்கள் பிரச்சனைகளில் மக்கள் மனங்களை வென்றுள்ளதா என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறியே.

பல்வேறு பட்ட தமிழக நிகழ்வுகளில் எந்த ஒரு முடிவையும் மக்கள் நலம் சார்ந்து எடுக்க முடியாத நிலையே அ.தி.மு.க அரசிற்கு ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றிகும் காரணம் மத்திய அரசே என்று தமிழக அமைச்சர்கள் புலம்பாத நாளில்லை.

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது, நீட்  தேர்வு, மதுக்கடை பிரச்சனை. விவசாயிகள் பிரச்னை என்று பிரச்சனைகள் முடிவு காணப்படாமல் இருப்பது போல் சில பிரச்சகைளில் தற்காலிக தீர்வுகளையும் இந்த அரசு காணமல்லிலை. குறிப்பாக அரசு ஊழியர் போராட்டம், பயிற்சி மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம், போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் என்று சிலதை சொல்லலாம்.

மொத்தத்தில் அரசு நிர்வாத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகவும், அதனால் மாநில அரசு எந்த முடிவுகளையும் எடுக்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது. அரசின் நிலைத்தன்மை இன்றும் கேள்வி குறியாக இருப்பது, அ.தி.மு.க அரசின் மிகப் பெரிய பலஹீனமாக உள்ளது. அ.தி.மு.க பிளவு ஒன்றுபடுமா, இரட்டை இலை சின்னம் மீட்டெடுக்குமா என்பதெல்லாம் அதன் கட்சி சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும், ஆட்சியை அது வெகுவாக பாதிக்கிறது.

வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஒரு பொதுத்தேர்தல் தமிழகத்திற்கு வரும் என்றும் அதுவரையே இந்த ஆட்சி  நீடிக்கும் என்றும் கட்டியம் கூறப்படுகிறது. தற்போதைய அ.தி.மு.க அரசு  மக்கள் பிரச்சனைகளில் கவனம் செழுத்தி மக்கள் ஆதரவை பெறவில்லை என்றால் இனி அதன் ஆட்சியையும், கட்சியையும் மீட்டெடுக்க முடியாது என்பதும் நாலு ஆண்டுகளை கடப்பதும் இயலாது என்பதும் நிதர்சனம்., இது தமிழக மக்களுக்கு ஒரு வேதனையான விஷயமே. வாக்களித்து ஏமாந்தது போய், மீண்டும் ஒரு வாக்கெடுப்புக்குத் தான் தமிழகம் தயாரக வேண்டியிருக்கும்.

You may also like...

Leave a Reply