[:en]காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு [:]

Advertisements

[:en]காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நேற்று முழு அடைப்பு தொடங்கியது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

தளபதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் ராணுவத்துக்கு எதிராக நாசவேலையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கமும் ஒன்றாகும். இந்த இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்த 22 வயது பர்கான் வானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த இயக்கத்தின் தளபதி பொறுப்பை சப்சார் அகமது பட் என்பவர் ஏற்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். 2 நாட்களுக்கு முன்பு புல்வாமா மாவட்டம், டிரால் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சப்சார் அகமது பட்டையும் அவருடன் இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் இன்னொரு பயங்கரவாதியையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இதேபோல் பாரமுல்லா மாவட்டத்தில் ராம்பூர் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முழு அடைப்பு தொடங்கியது
இதைக் கண்டித்து, ஹூரியத் மாநாடு அமைப்பு மற்றும் காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகியவை மாநிலம் முழுவதும் 2 நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இந்த முழு அடைப்பு நேற்று தொடங்கியது.

போராட்டக்காரர்கள் ஒன்றாக திரண்டு வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க தலைநகர் ஸ்ரீநகர் உள்பட மாநிலம் முழுவதும் நேற்று பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

படை வீரர்கள் குவிப்பு
இதையடுத்து இந்த நகரங்களில் மாநில போலீசாரும், துணை ராணுவ வீரர்களும் குண்டு துளைக்காத உடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீநகரில், ஹூரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மீர்வைஸ் மவுலவி உமர் பாரூக் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உரையாற்றும் ஜாமியா மசூதியை சுற்றி நூற்றுக்கணக்கான படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

பிரிவினைவாத காஷ்மீர் விடுதலை முன்னணியினர் அதிகம் வசிக்கும் மைசுமா பகுதியில் சட்டம்– ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பு முள்வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர்.

இயல்பு வாழ்க்கை முடக்கம்
அனந்த் நாக், காந்தர்பால், பத்காம், சோபியன், குல்காம், புல்வாமா, பாரமுல்லா ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் அங்கு மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.

போராட்டக்காரர்கள், ரெயில்களை குறி வைத்து நாசவேலையில் ஈடுபடலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தின் பல பகுதிகளில் ரெயில் சேவை மற்றும் இன்டர்நெட், மொபைல் போன் சேவைகளும் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் தொழில் நுட்ப மற்றும் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வுகளும், ஸ்ரீநகரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வும் திட்டமிட்டபடி நடந்தன.

தலைவர்கள் கைது
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரின் மைசுமா பகுதியில் உள்ள காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் முகமது யாசின் மாலிக் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஹூரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர்கள் சையத் அலி ஷா கிலானி, மீர்வைஸ் மவுலவி உமர் பாரூக் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com