[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]

Advertisements

[:en]சரியாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பின. ஆனால், அந்த ஓர் ஊர் மட்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு மாதம் ஆனது.

1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அந்த ஊரில் அனைத்து வீடுகளும் ஒரு மாதமாக காலியாகவே இருந்தன. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்கு அந்த ஊர் மிகுந்த சிரமப்பட்டது. அந்த ஊரின் பெயர் திருநின்றவூர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கமோ, அல்லது மாவட்ட நிர்வாகமோ தங்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருநின்றவூர் மக்களின் ஒரு பகுதியினர் முழுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். அப்போது திருநின்றவூர் மக்களின் தீவிர போராட்டத்தால் ஏரியின் தண்ணீர் குறைக்கப்பட்டுக் குடியிருப்பு பகுதிகள் காப்பாற்றப்பட்டன.

திருநின்றவூர் ஏரிக்கு அருகிலுள்ள குடியிருப்புக்களின் நிலை இதுதான். தண்ணீரைத் திறந்து விடுங்கள், குடியிருப்புக்குள் தண்ணீர் புகாதவாறு கரை கட்டிக் கொடுங்கள், தண்ணீர் வெளியேறும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உதவிக்கு வரவில்லை என்பதுதான் பெரும் சோகம்.

அதேபோல இப்போதும் இவர்கள் வைக்கும் கோரிக்கையை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டால் கூட திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏனோ தெரியவில்லை. திருவள்ளூருக்குப் பல மாவட்ட ஆட்சியர்கள் வந்தும் இந்த ஊரின் பிரச்னை தீராமல் அத்திப்பட்டி போலவே இருக்கிறது. இந்நிலையில் மக்களே ஏரியைத் தூர் வாரும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்திப்பட்டி போல காட்சியளிக்கும் ஊர்

திருநின்றவூர் ஏரி மொத்தம் 850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த 30 ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படவில்லை. அதனால் ஏரியின் உள்பகுதி மேடாகக் காட்சியளிக்கிறது. இதனால் சிறிய மழைக்கே ஏரி நிரம்பியதைப் போலக் காட்சியளிக்கிறது.

இதனைத் தூர் வாரவும், தண்ணீர் வெளியேறும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்ற மக்கள் பல்வேறு வகைகளில் தங்களது கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்து வந்தனர். மாவட்ட நிர்வாகம் இதற்கெல்லாம் செவி சாய்ப்பது போல தெரியவில்லை.

பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கடந்த 19-ம் தேதி மக்கள் கடப்பாரை, மண்வெட்டியுடன் ஏரியில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதற்குத் தலைமை தாங்கிய முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அன்புசெழியனிடம் பேசினோம்.

தூர் வாரும் நூதன போராட்டம்

“எங்களுக்குப் பெரிய ஏரியில 1994-ம் வருஷம் குடிசை மாற்று வாரியம் பட்டா கொடுத்துச்சு. அப்போ இந்த ஏரியின் பரப்பளவு சின்னதாவும், தண்ணீர் வெளியேறும் கால்வாய் நல்லாவும் இருந்துச்சு. ஆனால், காலப்போக்குல கால்வாய்களை மக்கள் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டுலதான் இருக்கு. ஆனா, ஆக்கிரமிப்புகளை எடுக்க பொதுப்பணித்துறை முன் வர மாட்டேங்குது. இதனால, எப்போவெல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் ஊருக்குள்ள தண்ணி வந்து வீடுகள் எல்லாம் மூழ்கிடும். இதுக்கு ஏரிய தூர்வாராததும், பாதியில் கட்டப்பட்டு நிறுத்தப்பட்டு உள்ள தடுப்பு சுவரும் ஒரு காரணம். சுவர் கட்டுவதற்கு அன்பு செழியன்ஒதுக்கப்பட்ட தொகை 265 லட்சம் முழுவதும் வீணாகியது. அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி வீணாணதுக்குக் காரணம், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொறுப்பு இல்லாமல் செயல்படுவதே காரணம். வெள்ளம் வரும்போது மட்டும் தலை காட்டுற அதிகாரிங்க நடவடிக்கை எடுக்குறோம்னு சொல்லிட்டு போயிடுறாங்க. எங்க கோரிக்கையை மட்டும் யாரும் காதுகுடுத்து கேட்க மாட்டேன்றாங்க.

உயர்நீதிமன்றம் மூணு தடவை தீர்ப்பு குடுத்தும் ‘சிலபேர்’ நடவடிக்கை எடுக்க விட மாட்டேங்குறாங்க. எங்க கோரிக்கை மூணுதாங்க… ‘கால்வாய்கள்ல இருக்குற ஆக்கிரமிப்பை முழுசா எடுக்கணும், ஏரியை முழுசா தூர்வாரணும், பலமான தடுப்பு சுவர் கட்டிக் கொடுக்கணும்’. இப்போ மழை இல்லாம வறண்டு இருக்குறதால தூர் வாருறது சுலபம்.

ஆனா, அதிகாரிங்க நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டேங்குறாங்க. பொதுப்பணித்துறையும், குடிசை மாற்று வாரியமும் எங்களைச் சுத்தமா நாங்க சொல்றதை கேட்க மாட்டேங்குது. அதனாலதான் எங்க போராட்டத்தை ஏரியை தூர்வாருறது மூலமா ஆரம்பிச்சிருக்கோம். இதுக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்” என்றார்.[:]

You may also like...

Leave a Reply