[:en]உல்லாச உலகம் எனக்கே சொந்தம் …… பரப்பண அக்ரஹார சிறை அட்டகாசம் —- ஆர்.கே.[:]
[:en]
உல்லாச உலகம் எனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா ஓ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா …… அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் பாடல் இது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நடித்த இப்படத்தில் நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு வாய் அசைக்க கந்தசாலா பாடுகிறார். இது எக்குத்தப்பாக இன்றை அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜனுக்கு பரப்பண அக்ரஹார சிறையில் சாலப் பொருந்துமோ என எண்ணத் தோன்றுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பெங்களுரூ பரப்பண அக்ரஹாரச்சிறையில் இருப்பவர் சசிகலா. நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அவர், அங்கு நடத்தும் சிறைதர்பார் வாழ்க்கை அனைத்து ஊடகங்களின் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.
பரப்பண அக்ரஹார சிறையில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய சென்ற கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, கண்டறிந்து தந்த அறிக்கை இந்தியா முழுமையையும் அதிரச் செய்துள்ளது.
சிறையில் உள்ள கைதிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சலுகையில் இருந்து விலக்கு பெற்றவராக சிறப்பு சலுகையுடன் வலம் வந்துள்ளார் சசிகலா. இதை எதை உணர்த்துகிறது என்றால். நன்றாக கொள்ளை அடியுங்கள், உள்ளே சென்று தய்யடா தய்யடா தய்யடா என்று ஆட்டம் ஆடுங்கள் என்பதை சொல்லாமல் சொல்லுவது போல் உள்ளது.
எதையோ பார்க்க போனபோது, வேறு ஏதோ மாட்டிய கதையாக கந்தலாகி நிற்கிறார் சசி. முறைகேடுகளை ஆய்வு செய்ய சென்ற டிஐஜி ரூபாவை சசி மிரட்டியுள்ளதாக ஊடகங்களுக்கு ரூபா பேட்டி அளித்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளாக 5 சொகுசு அறைகள், அதில் தனியாக சமைத்து சாப்பிட அறை, வரவேற்பு அறை, ஏசி என்று இத்தியாதிகள் நீண்டு கொண்டு போகிறது.
டிஐஜி ரூபாவின் ஆய்வில் இச்சலுகைகளைப் பெற ரூ.2 கோடி லஞ்சம், சிறைத் துறை டிஜிபி சத்ய நாரயாணாவுக்கு கொடுக்கப்பட்டதாவும், தாங்கள் தங்கள் கண்ணியத்தை காப்பாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இச்சூழ்நிலையில் மாநில அரசு, ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மூலம் விசாரிக்க சொல்லியுள்ளது. எதிர்கட்சிகளோ, நீதிபதி மூலம் விசாரணை கமிஷன் வைக்க கோரியுள்ளனர். இதற்கிடையே ரூபா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சத்தியநாராயணா காத்திருப்பு பட்டியலுக்கு சென்றுள்ளார். சசியின் பரப்பண அக்ரஹார சிறை ஊழல் அங்குள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியை உலுக்கி பார்த்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர்கட்சிகளின் பாய்சலுக்கும், ஊடகங்களின் கேள்விகளுக்கும் விடை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். காரணம்?
கர்நாடக அரசின் கண்டுகாதே கண்டுகாதே மனப்போக்கு. ஊழலில் திளைக்கும் அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள். நீங்கள் ஊட்டி, கொடைக்காணல் போகணுமா? வேண்டவே வேண்டாம் பரப்பண அக்ரஹார சிறைக்கு வாங்கோ என்று விளம்பரம் தராத குறையாக சிறையில் அட்டகாசம்.
செல்போன், போதை வஸ்து, விரும்பி வசதிகள் எல்லாம் காசு கொடுத்தால், கண கச்சிதமாக அரங்கேறும். உண்மையை போட்டு உடைத்த சிறை கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம். அவமானத்தால் குனி குறுகி நிற்கிறது கர்நாடக அரசு. இது ஒரு தேசிய அவமானம். இந்திய சிறைகள் எந்த லட்சணத்தில் இயங்குகின்றன என்பதற்கு கர்நாடக பரப்பண அக்ரஹாரம் ஒரு உதாரணம். இது மாநிலங்களின் உரிமை கீழ் வந்தாலும். பல விஷயங்களை தனது கையில் எடுத்து இருக்கும் மைய அரசு சிறைத்துறையையும் எடுக்க வேண்டும். இல்லையென்றால் மொத்த இந்தியாவுக்கும் உலை வைக்கும் சதி வேலை இங்குதான் நடக்கும் என்பதில் ஐயமில்லை. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதம், காஷ்மீர் தீவிரவாதிகள், உல்பா, பொடா, நக்சல் என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். இவர்கள் இங்கு காரியம் சாதிக்க போவது எளிது. அப்புறம் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதைக்கு போக வேண்டாம்.
இவ்விஷயத்தில் மாநிலகங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் மைய அரசு தனது கட்டுபாடுகளையும், அதிகார வரம்பையும் சிறைத்துறையில் நீட்டிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாக உள்ளது. மாநில அரசுகள் எத்தகையவர்களின கைகளில் உள்ளது என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு உதாரணம் தேவையில்லை. மக்களின் பாதுகாப்பு, பயங்கரவாத, தீவிரவாத தடுப்பு இதில் ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என்றால் வேறு என்ன செய்ய உத்தேசம் என்பதை மத்திய அரசு நடிவடிக்கையில் காட்ட வேண்டும். மாநில உரிமை, மாநில உரிமை என்று உரிமை பேசும் மாநில அரசுகள் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு பரப்பண அக்ரஹார சிறை ஒரு உதாரணம். ஒட்டு மொத்தமாக நாடு முழுமைக்கும் சிறைத்துறை சீரமைப்பை கொண்டு வரவேண்டும். அதுதான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வாக இருக்கும். இல்லையென்றால் தய்யடா தய்யடா தய்யடாதான். ஜெயிலுக்கு போனவன கேட்டா ஊட்டி கொடைக்காணலுக்கு போய்டு வந்தேன் என்பான்.
[:]