[:en]ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்….[:]

Advertisements

[:en]

ஒருவரிடம் கூர்த்த அறிவு, மற்றவரிடம் பரந்த இதயம். இந்த அறிவும் இதயமும் ஒருங்கே கொண்ட ஒருவர் பிறப்பதற்கான காலம் கனிந்தது. சங்கரரின் கூர்த்த அறிவும், சைதன்யரின் எல்லையற்ற பரந்த இதயமும் கொண்ட, எல்லா மதப் பிரிவுகளிலும் ஒரே இறைவனைக் காணக்கூடிய, ஏழைகள், பலவீனர்கள், கிழ்ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர் என்று இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உருகும் இதயம்கொண்ட, அதே வேளையில்  இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு  வெளியிலும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் மதப்பிரிவுகள் அனைத்தையும் சமரசபடுத்தி அறிவுக்கும் உணர்ச்சிக்கும் சம  இடம் கொடுக்கின்ற, உலகம் தழுவிய மதம் ஒன்றை உருவாக்குவதற்குரிய சிந்தனை வளம் மிக்க ஒருவர் பிறப்பதற்கு உரிய காலம் வந்தது.

thakur-singing

அத்தகைய மனிதர் பிறந்தார். அவரது திருவடிகளின் கீழ் பல ஆண்டுகள் அமர்வதற்கான பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அத்தகைய ஒருவர் பிறப்பதற்கான தேவை ஏற்பட்டது. காலமும் கனிந்தது, அவர் பிறந்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எந்த நகரம் மேலை நாட்டுச் சிந்தனைகளால் நிறைந்திருந்ததோ, எந்த நகரம் மேலை நாட்டுக் கருத்துக்களின் பின்னால் பைத்தியமாக ஓடிக் கொண்டிருந்ததோ, எந்த நகரம் இந்தியாவிலுள்ள மற்றெல்லா நகரங்களையும் விட ஐரோப்பியமயமாகி விட்டிருந்ததோ அந்த நகருக்கு அருகிலேயே ஓரிடத்தில் அவரது வாழ்க்கைப் பணியெல்லாம் நடைபெற்றது. அவருக்கு நூலறிவு எதுவும் இல்லை. இந்த மாபெரும் அறிஞருக்குத் தமது சொந்தப் பெயரைக்கூட எழுதத் தெரியாது. ஆனால் கல்வி மிக்க நமது பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அவரிடம் அறிவுக் களஞ்சியத்தையே கண்டனர். இந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு விசித்திரமான மனிதர்.

அவர் இந்திய ரிஷிகளின் நிறைவாகத் திகழ்ந்தார். தற்காலத்திற்குரிய ரிஷி அவர், அவரது உபதேசங்களே இந்தக் காலத்திற்கு மிகவும் பயன் தருபவை என்பதை மட்டும் இப்போது கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவருக்குப் பின்னணியில் செயல்பட்டது தெய்வீக ஆற்றல் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு தெரியாத, யாரும் கேள்விப்படாத ஒரு குக்கிராமத்தில் ஏழை அர்ச்சகராக பிறந்த அவர் இன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கான மக்களால் வழிபடப்படுகிறார். நாளை பல்லாயிரக் கணக்கான நபர்களால் வழிபடபடுவார். நேரம் கிடைத்து வாய்ப்பும் கிடைக்குமானால் அவரைப் பற்றி மேலும் பேசுவேன். ஆனால் இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்: உங்களிடம் நான் உண்மையான எதாவது ஒரு வார்த்தை பேசி இருந்தேனானால், அது அவருடையது, அவருடையது மட்டுமே; உண்மையில்லாத, தவறான, மனித இனத்திற்கு நன்மையைத் தராத எதையாவது நான் பேசியிருந்தால், அவையெல்லாம் என்னுடையவை, அதற்கு பொறுப்பாளி நானே.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com