[:en] நீட் போராட்டங்கள் ஆட்சியாளர்களின் அடக்குமுறை – ஆர்.கே.[:]

Advertisements

[:en]

தங்கை அனிதா மறைவுக்கு பின் ஒரு மாபெரும் எழுச்சி நீட்டுக்கு எதிராக தமிழகத்தில் எழுந்துள்ளது உண்மை. காணும்  இடம் எங்கும் மாணவர் போராட்டம். கல்லுரி மாணவர்களில் இருந்து பள்ளி மாணவர் வரை இந்த போராட்டத்தின் தாக்கம் நீடித்துள்ளது.

நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் நீட் தேர்விற்கு எதிராக 4 மணி நேரம் பொதுபோக்குவரத்தை மறித்து சென்னையின் பிரதான சாலையான நுங்கம்பாக்த்தை திணறடித்துள்ளனர். காவல் துறை அம்மாணவிகளின் போராட்டத்தை சிரமப்பட்டு சமாளித்து முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

நீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அறவழியில் போராட்டத்தை நடத்த எந்த தடையும் இல்லை என்று கூறி உள்ளது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, போராட்டத்திற்கு தடை என்பதாக மீடியாக்கள் முதலில் செய்தி பரப்பியது எல்லோரையும் கேள்வி கணைகள் தொடுக்க வைத்தது. ஜனநாயக உரிமைகள் நெறிக்கப்படுகின்றனவா? என்ற கேள்விகள் எழுந்தன.

பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லோர் புரிதலுக்கும் வந்தது. அறவழிப்போராட்டம் நடத்த தடை இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யலாம் என்று. ஆனால் போராட்ட வழி முறை போராட்டக்காரர்கள் தீர்மானிப்பது. அது சட்டத்திற்கு உட்பட்டதா?  அப்பாற்பட்டதா என்பதை போராடுபவர்கள் முடிவு செய்வார்கள். அதன் சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு தங்களை தயார் செய்து கொண்டுதான் போராடுகிறார்கள். இது ஜனநாயக  நடைமுறை.

ஆக இடையூறு இல்லா போராட்டம் என்று உலகில் எங்கும் இல்லை. அரசிற்கு எதிரான போராட்டத்தில் அரசு தனது வலிமையான அடக்கு  முறைகளை கட்டவிழ்த்து விடுவது வாடிக்கை அதை நாம் ஜல்லிகட்டு போராட்டத்தில், கதிராமங்கலம் போராட்டத்தில், கூடங்குளம் போராட்டத்தில் ,டாஸ்மாக் போராட்டத்தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.  மக்கள் பிரச்னைக்கு தீர்வு காணமல் அவர்கள் அடக்கி ஒடுக்கி விடலாம் என்று நினைப்பது, ஆட்சியார்களின் அறியாமையை காட்டுகிறது.

வரலாறு நமக்கு காட்டும் படிப்பினை அடுக்குமுறைகள் ஒருபோதும் வென்றதில்லை என்பதே. பேச்சுவார்த்தையும், அதன் அடிப்படையில் தீர்வு காண்பதுவுமே  அனைத்து தரப்பினருக்கும் நன்மையாக அமைந்திருக்கிறது.  அதைவிடுத்து மத்திய அரசின் அழுத்தங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் நெளிந்து கொண்டிருக்கும் மாநில அரசுக்கு  எதனை தின்றால் பித்தம் தெளிவும்  என்ற நிலையாக உள்ளது.

அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீட் உச்ச  நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பல்ல. அதை உணர்ந்து, இடைக்கால தீர்பாக சில வருடங்கள் விலக்கு கேட்கலாம்.  மத்திய வழி கல்வி  முறையில் கேள்விகள் கேட்கப்படுவதால் மாநிலவழி கல்வி முறையில் பயின்ற மாணவர்கள் சிரமத்தை  அடைகிறார்கள். அதற்காக வெளியில் பணம் கொடுத்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. பாடதிட்டமே நீட்டில் கேட்கப்படும் கேள்வியின் அடிப்படையில் இருந்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும்.

நீட்  தேர்வு  தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க என்று சொன்னால் மாநிலங்கள் நடத்தும் கல்வி இறுதி தேர்வு நடைமுறைகளில் மத்திய அரசிற்கு நம்பிக்கை இல்லை என்று பொருள். அதை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் உள்ள  மாநில அரசு  மத்திய அரசின் ஏவல் அரசாக இருப்பதை என்னவென்று சொல்வது. இன்று 1176 மார்க் வாங்கி மருத்துவ கனவுகள் நிறைவேறாமல் தன்னை பலியாக்கிக் கொண்ட தங்கை அனிதாவின் கேள்விகளுக்கு பதில் என்ன?

சமூக நீதிக்கு எதிரான உத்தரவுகளை  எதிர்க்கும் கடமை மக்களுக்கு உண்டு.  அதை அடக்கு முறையாள் எதிர்கொள்வோம் என்றால், மக்கள் அடிபணிந்துவிடுவார்கள் என நம்பினால். அவர்கள் தங்கள் வாக்கால் திருப்பி அடிப்பார்கள் என்பதையும் ஆளும் அரசுகள் மறந்துவிட வேண்டாம்.

 [:]

You may also like...

Leave a Reply