[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]

Advertisements

[:en]

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

இந்தியாவும், சீனாவும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மட்டுமல்ல, அண்டை நாடுகளும்கூட.

இரு நாடுகளுக்கு இடையில் எல்லை தொடர்பான சர்ச்சை தொடர்கிறது. உதாரணமாக டோக்லாமை கூறலாம்.

ஆனால், இந்திய-சீன எல்லையில் இருக்கும் இந்த இடத்தின் வழியாக சீன ராணுவத்தினர் இந்தியப் பகுதிக்கும், இந்தியர்கள் சீனப்பகுதிக்கும் சென்று வருவதை பார்க்க முடியும்.

  • இதுபற்றி விரிவாக தெரிந்துகொள்வதற்காக அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றோம்.

விடுதியோ தங்குவதற்கு சத்திரமோ இல்லை

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

அசாம் மாநிலத் தலைநகர் கெளஹாத்தியிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து திப்ருகர் வழியாக தின்சுக்கியாவை அடைந்தோம்.

அருணாச்சல பிரதேசத்தின் எல்லை இங்கிருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவில் உள்ளது. இங்கேயே மலைப்பகுதிகள் தொடங்கிவிடுகின்றன. அருணாச்சல பிரதேசத்தின் எந்த பகுதிக்கும் அனுமதி இல்லாமல் செல்லமுடியாது.

மலையுச்சியில் இருக்கும் ஹாயோலாங் நகரை அடைவதற்கு பத்து மணி நேரம் ஆனது. இங்கு தங்கும் விடுதிகளோ, சத்திரங்களோ எதுவுமே இல்லை. பல இடங்களில் அலைந்த பிறகு, அரசினர் விடுதியில் தங்க இடம் கிடைத்தது.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

ஆபத்தான மலையேற்றம்

“நீங்கள் மலைப்பாதை வழியாக சீன எல்லைக்கு செல்லப்போகிறீர்களா? இது நிலச்சரிவு அடிக்கடி ஏற்படும் பகுதி” என்று அங்கிருந்த வழிகாட்டி சொன்னார்.

மனதில் பலவிதமான கேள்விகளை சுமந்துகொண்டு கரடுமுரடான பாதையில் மலையில் ஏறத் தொடங்கினோம். மலையேற்றம் அச்சமளிப்பதாக இருந்தது. ஒருபக்கம் விண்ணை முட்டும் மலைமுகடு என்றால், மறுபுறமோ அதல பாதாளம் வரை தென்படும் பள்ளத்தாக்கு.

பலமணி நேர பயணித்திற்கு பிறகு, ஒரு சில மனிதர்களை பார்த்தோம், அவர்கள் எங்களை விசித்திரமாக பார்த்தார்கள்.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

சீனா செல்வது எளிது

சீன எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமத்தை சென்றடைந்தோம். சஹல்காமில் வசிக்கும் ஐம்பது குடும்பங்களில் அல்லிம் டேஹாவின் குடும்பமும் ஒன்று.

இங்கு வசிக்கும் மக்களின் வருவாய்க்கு ஏலக்காய் விவசாயம் கைகொடுத்தாலும், இங்கு வசிப்பவர்கள் நாட்டின் பிற பகுதிகளை தொடர்பு கொள்வது மிகவும் சிரமம். உணவுப்பொருட்களை வாங்குவதற்காக ஐந்து மணி நேரம் பயணம் செய்யவேண்டும்!

இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் உறவினர்கள் சீனாவிலும், இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

சீனாவில் இருக்கும் உறவினர்களின் வீட்டிற்கு இந்த இந்திய கிராமத்தினர் சுலபமாக செல்லமுடியும் என்கிறார் அல்லிம் டேஹா.

அவர் சொல்கிறார், “மிஷ்மி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் குடும்பத்தில் பலர் சீன எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள், வனங்களில் மூலிகைகளை பறிக்கச் செல்லும்போது, அந்தப்புறத்தில் இருக்கும் எங்கள் உறவினர்களையும் சந்தித்து வருவோம். இங்கிருந்து ஒன்று அல்லது இரண்டு மணி நேர பயணத்தில் அங்குள்ள உறவினர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்வோம்”.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

கிராமத்தில் இந்திய ராணுவத்தின் ஒரு முகாம் இருக்கிறது. அங்கு புகைப்பிடித்துக் கொண்டிருந்த சில சிப்பாய்களை பார்த்தோம்.

ஜம்முவை சேர்ந்த ஒரு சிப்பாய் சொல்கிறர், “உங்களை இங்கு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மொபைல், டி.வி எதுவுமே இங்கு கிடையாது. மலையில் ஏறிவிட்டால் அவ்வளவுதான். இங்கு வானிலை எப்படி இருக்கிறது பாருங்கள்.”

சஹல்காம் மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்களில் பலர், ராணுவத்தினருக்கு வழிகாட்டிகளாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் பணிபுரிகின்றனர். வழிகாட்டியாக பணிபுரிந்த 24 வயது ஆயண்ட்யோ சோம்பேபோ இப்போது வேலை தேடி வருகிறார்.

சீன வீரர்கள் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்

எல்லை தாண்டும்போது மட்டுமல்ல, வேறு பல சமயங்களிலும் சீனப் படையினர் இவர்களை தாக்குகின்றனர்.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை
Image captionஆயண்ட்யோ சோம்பேபோ

ஆயண்ட்யோ சோம்பேபோ சொல்கிறார், “அன்று மதியம், நான் எல்லைக்கு மிக நெருக்கமாக நடந்து கொண்டிருந்தேன். எல்லைக்குள் நூறு மீட்டர் தொலைவிற்குள் என்னை பிடித்துவிட்டார்கள். என்னை பிடித்து வைத்துக் கொண்ட அவர்கள், கிராமத்தில் எத்தனை இந்திய வீரர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார்கள். எங்கள் ராணுவத்தில் 300 வீரர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று சொன்னேன். சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.”

இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் சீன எல்லையை கடந்து சென்றுள்ளனர். மெக்கிக்கேம் டெஹாவின் கருத்துப்படி, “அங்கு வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கிறது, மூன்று அடுக்கு மாடி கட்டடங்களையும் சிறப்பான சாலைகளையும் அங்கு பார்க்கமுடிகிறது. இந்தியாவில் அங்கிருக்கும் வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிகூட ஏற்படவில்லை”.

  • இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை தொடர்பான முரண்பாடுகளும், சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. எல்லை பிரச்சனையில் 1962ஆம் ஆண்டில் இருநாடுகளும் போரில் ஈடுபட்டன.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக மோதல் போக்கு சில மாதங்கள் தொடர்ந்தது. இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் உள்ள கிராம எல்லைகள் சீனாவை ஒட்டியிருக்கின்றன.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

நிலையான எல்லை இல்லை

ஆனால், சிக்கிமைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை.

இந்த பிரச்சினையை நேர்மறையான சிந்தனையுடன் அணுகினால் தீர்க்கப்பட முடியும் என இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் வி.பி. மாலிக் கருதுகிறார்.

அவர் கூறுகிறார், ” எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி என்று இந்திய தரப்பு ஒப்புக்கொள்ளும் அல்லது சீனா ஒப்புக்கொள்ளும் பகுதிகளில் ஏதாவது ஒன்றையாவது குறிக்கவேண்டும். அப்படி எல்லை குறிக்கப்பட்டால், குறைந்தபட்சம் நாம் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்பதை ஜி.பி.எஸ் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். சீனா இதுவரை எல்லைக் கோட்டை குறிக்க அனுமதிக்கவில்லை. எனவே சீன வீரர்கள் அவ்வப்போது இந்தியப் பகுதிக்குள் வந்து செல்கின்றனர்”.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை
Image captionஜெனரல் வி.பி. மாலிக்

இரண்டு சக்திமிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான அரசியல் முரண்பாடுகளால் எல்லை விவகாரம் அந்தரத்தில் ஊசலாடுகிறது.

ஆனால், இந்திய எல்லையில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு எல்லை என்பது பெயரளவில்தான்.

[:]

You may also like...

Leave a Reply