[:en]மிரட்டுகிறதா மெர்சல் – பாஜக பதட்டம்  –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

நடிகர் விஜய் நடித்து தீபாவளி வெளியிடாக வெளிவந்துள்ள படம் மெர்சல்.  படம் வருவதற்கு முன்பே அதில் அரசியல் தாக்குதல் இருக்கும்  என்று  ஆரூடங்கள் சொல்லப்பட்டன. ஆனால் யாருக்கு எதிராக இருக்கப் போகிறது என்று தெரியாத நிலையில் இப்போது படம் வெளியாகி பிரச்னையை கிளப்பி இருப்பது மத்திய ஆளும் கட்சியான பாஜக.

அதன் மாநில தலைவர் தமிழிசை  சௌந்தரராஜன் மெர்சல் படத்திற்கு எதிராக கண்டனங்களையும் எச்சரிக்கைகயையும் ஊடக பேட்டிகளில் சொல்லியுள்ளார். அப்படி என்ன அந்த படத்தில் எதிர்பான கருத்துக்கள்? உண்மையில் நடிகர் விஜய் அந்த படத்தில் ஆளும் பாஜக அரசின் திட்டங்களை விமர்சித்து கருத்துக்களை சொல்வதாகவும், அது உண்மைக்கு  புறம்பான தகவல் என்றும், அதனால் மக்கள் ஆட்சியாளர்களை தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார். ஆகையால் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்திற்கு செல்வோம் என்றும் சொல்லியுள்ளார்.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பிற்கு பிறகு மக்கள் துன்பப்படுவதாகவும், ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பிற்கு பிறகு விலைவாசி ஏறியுள்ளதாகவும், 7 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் சிங்கபூர் நாட்டிற்கும்,  28 சதவீதம் வசூலிக்கும் நம்நாட்டிற்கும் மருத்துவ சேவையில் மிகுந்த வித்தியாசம் காட்டப்படுகிறது என்றும், டிஜிட்டில் மணி விவகாரம் நடிகர் வடிவேலு மூலமாக விமர்சிக்கப்படுகிறது என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுப்பியுள்ளனர். தமிழக பாஜக தனது கடும் கண்டத்தை தெரிவித்து வருகிறது. படத்தில் அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இது கருத்து சுதந்திரத்திற்கு விடப்படும் சவால் என்று கூறுகின்றனர்.  படத்தில் இடம் பெற்றுள்ள கருத்தில் எந்த தவறும் இல்லை என்கின்றனர்.

உண்மையில் இதில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு படத்தை இயக்கி உள்ள இயக்குனர் அட்லி என்பவருக்கே உண்டு.  இயக்குனரின் கருத்துக்களைத்தான் நடிகர்கள் நடிக்கின்றனர். இயக்குனர்களின் கருத்துகளுக்கும், நடிகருக்கும் உள்ள சம்பந்தமே அதில் நடித்த வகையில் மட்டுமே வருகிறது.  ஒரு நடிகராக இயக்குனரின் கருத்துகளை உள்வாங்கி பேச வேண்டிய பொறுப்பு நடிகருக்கு உள்ளது. இது நடிகரின் தனிப்பட்ட கருத்தாக பார்க்க முடியாது. ஒருவேளை அதில் தவறு இருக்கும் பட்சத்தில் அதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. மக்கள் மன்றத்தில் வேண்டாத விவதாங்களை வேண்டுமானல் செய்து கொள்ளலாம். அது அவர்களுக்கு ஏதாவது அரசியல் லாபம் தரலாம் என்கின்ற அடிப்படையில். மற்றபடி இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

கருத்து சுதந்திர அடிப்படையில் மாறுபட்ட கருத்துக்களை சினிமா ஊடகத்தில் காட்டுவது இது புதிய முயற்சி அல்ல. சுதந்திரத்திற்கு முன்பாக இருந்தே அரசியல் கருத்துக்கள்,  ஆட்சியார்களின் திட்டங்களை விமர்சிக்கும் கருத்துக்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. படத்தை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. பாஜகவின் விமர்சனத்தையும் அப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது.

இதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாக கூறுவது, கருத்து சுதந்திரத்திற்கு வைக்கும் ஆப்புதான். இதில் யாரையாவது தனிப்பட்ட முறையில் விமர்சித்திருந்தால் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். இதில் எதுவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆட்சியாளர்களின் திட்டங்களை விமர்சிக்கும் உரிமை இல்லை என்றால் சர்வாதிகார நாட்டில் வசிக்கிறோமா? என்று எண்ணத் தோன்றும்.  பிரதமர் மோடி மக்களின் வாக்குகளை பெற்று பதவியில் அமர்ந்துள்ளார்.  அவர் மக்களின் சேவகர், எஜமானர் அல்ல. அதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். தான் ஒரு சேவகன் என்று பிரதமர் மோடி ஒவ்வொரு மேடைதோறும் முழங்கி வருகிறார். அது வெற்று வார்த்தை அல்ல என்பதை நிருபிக்க வேண்டிய பொறுப்பு பாஜகவிற்குத்தான் உள்ளதே தவிர நடிகர் விஜய்க்கு அல்ல.

 

 

 

 [:]

You may also like...

Leave a Reply