[:en]பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுக்கும் ஆளுநரின் நடவடிக்கை[:]

Advertisements

[:en]

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோயம்புத்தூரில் அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ததற்கு தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அமைச்சர் வேலுமணி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று அந்த மாவட்டத்திற்கு சென்றார். பட்டமளிப்பு விழா முடிவடைந்த பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துத் துறை உயரதிகாரிகளையும் ஆளுநர் சந்தித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களோடு, ஒவ்வொரு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆளுநரின் இந்த ஆய்வுக் கூட்டம் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்றும் கோவையில் சில திட்டப்பணிகளை குறிப்பாக தூய்மை இந்தியா திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார். இதற்குப் பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பன்வாரிலால் புரோஹித், இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற ஆய்வுகளை நடத்தப்போவதாகக் கூறினார். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையிலேயே இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக ஆளுநர் இம்மாதிரி ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

“புதுச்சேரியிலும் தில்லியிலும் துணைநிலை ஆளுநர்களின் தலையீட்டால் எப்படி நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறதோ அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுருவும் பி.ஜே.பி.யின் பாணி இது போலும்!” என்று அ.தி.மு.கவின் ஒரு பிரிவைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் நடத்திய கூட்டம்படத்தின் காப்புரிமைBBC SPORT

ஜெயலலிதா ஒருபோதும் இதுபோன்ற ஆய்வுகளை அனுமதிக்க மாட்டார் என்றும் முதல்வர் பழனிச்சாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுநரின் ஆய்வு உணர்த்துகிறது என்றும் தினகரன் கூறியிருக்கிறார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அளிக்கும் பரிந்துரைகளை மட்டுமே அவர் செயல்படுத்த முடியும். தமிழக ஆளுநரின் வரம்பு மீறிய இந்த செயல்பாடு அரசியல் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமின்றி வாக்களித்து இன்றைய அரசை தேர்ந்தெடுத்த குடிமக்களையும் அவமதிப்பதாக உள்ளது.

டெல்லி, புதுச்சேரி முதலான யூனியன் பிரதேசங்களிலும் கூட ஆளுநர் வரம்பு மீறி நடந்துகொண்டால் அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், அப்படி இருக்கும்போது பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஆளுநருக்கு முதலமைச்சர் எவ்வித அதிருப்தியையும் தெரிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com