காசியில்  பாரதி  பேரன்

Advertisements


பாரதி இங்கேதான் கொஞ்ச வருஷம் இருந்தாராம். அவரோட வீட்டை பார்க்கணும்டா.
எந்த பாரதி?
மகாகவி சுப்ரமணிய பாரதிடா..
ஓ! இந்த சந்து,பொந்துல எங்கே இருந்தாரோ?! எப்படி அதையெல்லாம் கண்டு பிடிக்கிறது என்றான் இளங்கோ.
அதெல்லாம் தெரியாது. தேடிப் பார்க்கலாம்.
சரி! வா.. சொன்னா கேக்கவா போறே?
சின்ன, சின்ன சந்துகள். குப்பைகள். எல்லாவற்றையும் தாண்டி, நாங்கள் தேடிச் செல்லும் வழியிலேயே, ஒர் ஜிலேபிக் கடை. சுடசுட ஜிலேபிகளை வாணலியில் பார்த்து விட்டால், அதை வாங்கி சாப்பிடாமல் தாண்டிச் செல்வதில்லை என்பதை காசியில் ஒரு கொள்கையாகவே கடைபிடித்தேன்.
ஜிலேபி சாப்பிட்டு விட்டு, கை கழுவும் இடத்தில் நிமிர்ந்து பார்த்தால், நேரெதிரில் ஒரு சின்ன இடத்தில் மகாகவியின் மார்பளவு சிலை. காசி நகராட்சி வைத்திருந்தது. பராமரிப்பு என்பதெல்லாம் இல்லாத இடம். குப்பைகளைத் தாண்டிச் சென்று, அவர் முகத்தை உற்றுப் பார்த்தேன்.
” நரைக் கூடி கிழப் பருவமெய்தி
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென நினைத்தாயோ?”
என்றது அவரது முகம்.
அத்தனை தொலைவில், எனது ஆதர்ச நாயகனைப் பார்த்ததும், கண்கள் கலங்கி விட்டன.
அந்த இடத்திலிருந்தே மெல்ல விசாரித்து, சிவ மடம் என்று பெயரிட்ட, பாரதி வசித்த வீட்டை சென்றடைந்தோம். உள்ளே ஒருவர், யாரு? என்ன வேணும்? என்று சத்தமாகக் கேட்டார். அவர் அருகில் சென்று, அதை விட சத்தமாக, பாரதியோட வீடு இதுதானா? பார்க்க வந்தோம் என்றோம்.
ஆமாமாம்! உட்காருங்கோ.. இதுதான் பாரதி இருந்த வீடு. நான் கே.வி.கிருஷ்ணன். பாரதியோட பொண்ணு தங்கம்மா பாரதி இருந்தாளோன்னா, அவளோட மகன். அதாவது பாரதியாரோட பேரன்.
அடுத்த இரண்டு மணி நேரம் சென்றதே தெரியாமல் பேசிக் கொண்டே இருந்தார் அந்த என்பத்தியாறு வயது பழத்த மனிதர். மிக,மிக சுவாரஸ்யமான மனிதரும்கூட. பெரிய குடும்பம், பேரன்,பேத்திகள் என்று இருந்தாலும், முதுமையின் தனிமை என்ற வழமையான மனசிக்கலில் இருப்பது நன்றாக புரிந்தது.
காசி பனாரஸ் பல்கலைகழகத்தில் டெபுடி ரிஜிஸ்டாராக இருந்து ரிடையர் ஆகியுள்ளார். இசை, பாடல், பாரதி என அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு பட்டாசா வெடிச்சுத் தள்ளினார். அதிலிருந்து சில முத்துக்கள்..
வடக்கே எந்த வித்வான் கச்சேரிக்கு வந்தாலும், அப்போவெல்லாம் மிருதங்கத்துக்கு ஆளை அழைச்சுண்டு வரமாட்டா.. அதான் காசியிலே கிருஷ்ணன் இருக்காரோன்னா, என கடுதாசு போட்டுருவா. நாந்தான் அவங்க எல்லோருக்கும் மிருதங்கம்.. இந்துஸ்தானி என்றால் தபேலா..
ஒருமுறை எனக்கு ப்ரொஃபஸர் ப்ரமோஷனுக்கான எக்ஸாம். உள்ளே போனா, பாலக்காடு மணி ஐயர் எக்ஸாமினரா வந்திருக்கான். நான் எழுந்து வந்துட்டேன். பின்னே! என்னவிட ரெண்டு செட் ஜூனியர் என்னை எக்ஸாமின் பண்றதா? அவன் மாமா!மாமா! உங்களுக்குன்னு தெரியாதுன்னு பின்னாடியே ஓடி வரான்..
நான் டைகர் வரதாச்சாரிக்கு வாசிச்சவனாக்கும்.. ஆமா! உங்களுக்கு டைகர் வரதாச்சாரி தெரியுமோன்னா?
(சிங்காரவேலன் படத்துல, கமல் பாடும் பாட்டு ஒன்றில்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க்க பாட்டு ஒண்ணு புடிச்சேன்.
ஒரு டைகர் ஆச்சாரி, வரதாச்சாரி போல படிச்சேன்னு வரும்.
நான் கவிஞர் வாலி அதை எதுகை மோனைக்கு எழுதியிருக்காருன்னு நெனைச்சேன். அப்படின்னா, டைகர் வரதாச்சாரின்னு நெஜமாலுமே ஒரு பெரிய வித்வான் இருந்திருக்காரு!)
இங்கே யுனிவர்ஸிடியிலதான், அனிபெஸன்ட் அம்மையாரோட நிறைய லெக்சர் எல்லாம் நடக்கும். பல சமயம் விவேகானந்தர் இங்கே வந்து தங்கி மாணவர்களோட பேசுவார். அதையெல்லாம் போய் பார்த்ததாலதான், பாரதிக்கு ஒரு விசாலமான தேசியப் பார்வை வந்தது.
விவேகானந்தர் இங்கே தங்கியிருக்கும் போதுதான், நிவேதிதா தேவி அவரைப் பார்க்க வந்தாள். இது தெரியுமோன்னா? ஒருமுறை விவேகானந்தரோட அறையில நிவேதிதா என்னை முழுசா எடுத்துக்கோங்கா. என்று அவரிடம் போய் நின்னா! சுவாமியோ.. அவளிடம், அம்மா, நீங்கள் வெளிநாட்டுப் பெண். நானோ காவி அணிந்த இந்தியன். எங்க நாட்டுல துறவு எடுத்தால் அதுக்கப்புறம் பெண்கள் எல்லாம் துறவிகளுக்கு தெய்வம் அல்லது தாய். நீ எனக்கு தாய்! என்றாராம். நிவேதிதா தேவி அப்படியே அவரோட காலில் விழுந்து அவரோட சிஷ்யை ஆனாங்களாம். இப்போவெல்லாம் காவி துணி போட்டிருக்கவங்க லட்சணம் தெரியுமோன்னா? என்று கேட்டார்.
அந்த நிவேதிதா தேவிதான் பாரதியோட ஞான குரு. அந்தம்மாவிடம் பேசி,பேசித்தான் பாரதிக்கு பெண்கள் சுதந்திரம், உரிமை, சுயமரியாதை என பல விஷயங்கள் தெரிய வந்தது.
இன்னும் எவ்வளவோ பேசினார். பாரதியைப் பற்றி. அவரோட அம்மாவைப் பற்றி.. பாரதியின் பாடல்கள் குறித்து..
பாரதி அங்கு சின்ன வயதில் பாரதி அமர்ந்து படிச்ச அவரோட சின்ன மேசை, அவர் சங்கீதம் கத்துக்கிட்ட ஆர்மோனியம், அவர் ரயிலுக்கு எடுத்துட்டுப் போற பெட்டியெல்லாம் பாதுகாப்பா வைத்திருந்து காட்டினார்.
இதெல்லாம் அடுத்த தலைமுறை வச்சிருப்பாளோ? இல்லையோ? அதை நினைச்சாதான் எனக்கு கவலையா இருக்கு என்றார்.
சார்! இதெல்லாம் பாரதியோட நினைவுக்கு சாட்சி இல்லை. இன்னும் எத்தனையோ நூறு வருஷம் ஆனாலும், அவரோட கவிதைகளும், பாடல்களும் என்னைப் போல ஆயிரக்கணக்கான பேரோட வாழ்க்கையை மாற்றும் பாருங்க! அதுதான் சார் பாரதியோட நினைவு என்றேன்.
சந்தோஷமா தலையசைத்துச் சிரித்தார்.
அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தோம். வாசலில் இருந்து உள்ளே பார்த்தால், தொலைவில் பாரதியோட ஒரு சின்ன புகைப்படம் மாட்டப் பட்டிருப்பது தெரிந்தது.
‘இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!”
என கம்பீரமாக தலைநிமிர்த்திப் பாடிக் கொண்டே, அடுத்த ஜிலேபிக் கடைக்குச் சென்றோம்.
நன்றி : திரு. எஸ்கேபி. கருணா. அவர்கள்[:]

You may also like...

Leave a Reply