​2ஜி முறைகேடு வழக்கு.. தண்டனை வாங்கி கொடுக்காமல் ஓயமாட்டேன்..! சு.சுவாமி சூளுரை

Advertisements

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004-2014 காலக்கட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்போது காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுகவின் ஆ.ராசா, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் எழுந்த புகாரை அடுத்து, அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி எம்பி உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என 19 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

2ஜி முறைகேடு வழக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கைத் தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

இன்றைய தினம் 2ஜி வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று கடந்த 5ம் தேதி நீதிபதி ஓபி.ஷைனி தெரிவித்தார். அப்போது, 6 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 2ஜி முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து நீதிபதி ஷைனி தீர்ப்பளித்தார்.
தங்களின் மீதான ஊழல் கறையை துடைத்து தாங்கள் சுத்தமானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக திமுகவினர் குதூகலிக்கின்றனர். திமுகவினரும் காங்கிரஸாரும் 2ஜி வழக்கின் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என பெரிதும் நம்பிய சுப்பிரமணியன் சுவாமிக்கு இந்த தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில், 2ஜி வழக்கின் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Govt must prove its bonafides by filing an immediate appeal in High Court
— Subramanian Swamy (@Swamy39) December 21, 2017

தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன், சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞரும் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com