[:en]ஒத்த ரூபாய் தாரேன் உனக்கு மட்டும்தானே –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

தமிழக மக்களின் மன வேதனையை உணராது, வேந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது தமிழக அரசு. 60 சதவீத பஸ் கட்டண உயர்வை உயர்த்தி விட்டு, மக்களின் கடும் எதிர்ப்புக்கு அஞ்சும் விதமாக, ஒத்த ரூபாய் தாரேன் உனக்கு மட்டும்தானே என்பது போல், அதிகப்பட்ச கட்டணத்தில் ஒரு ரூபாய் குறைப்பது என்பது, தமிழ் மக்களை கிள்ளு கீரைகளாக எண்ணிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

அன்றாட தினக் கூலி 300 ரூபாய் கூட கிடைக்காது நகர்புற ஏழை, எளிய மக்கள், 150 ரூபாய்  கூட கிடைக்காத கிராமப்புற மக்கள், வேலை இல்லாத திண்டாட்த்தில் அவதியுறும் இளைஞர், இளைஞிகள் கூட்டம், தள்ளாத வயதிலும், தன்பாட்டே தானே கவனிக்க வேண்டிய முதியர்கள் என்று வறியபட்ட மக்கள், நடுத்தர மக்கள் வயிறு எறிந்து சாபம் கொடுப்பதை, அன்றாடம் கண் கூடாக பஸ் போக்குவரத்தில் பார்க்க முடிகிறது.

நல்லோர் சாபம் பொல்லாதது. அவர்களின் சாபம் ஆளும் அதிமுக அரசை கூடிய விரைவில் ஆட்டம் காண வைக்கும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. ஊழியர் ஊதிய உயர்வை காரணம் காட்டி, அப்பாவி மக்களின் தலையில் பாரத்தை ஏற்றுவது எந்த வகையில் நியாயம் என்று போரட்டங்களும், கைதுகளும் நாளும் அரங்கேறி வரும் வேளையில், ஒரு ரூபாய் குறைப்பு எந்த வகையில் நியாயம்? ஏற்றிக் கொண்டது 60 சதவீதம். குறைப்பது ஒரு ரூபாய்.  மக்கள்  மேலும் வெகுண்டு போய்  உள்ளார்கள்.

தினம் தோறும் 4 கோடி ரூபாய் இழப்பு என்கிறார் அமைச்சர். தமிழக போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்தில் இயங்க வைத்ததில் ஆட்சியார்கள் பங்கே இல்லை என்பது போல், இவர்கள் பேசுவது, காதில் பூ சுத்துவது போல் உள்ளது.

எல்லோருக்கும் எல்லா தெரியும் என்கிற ஊடக உலகில், தமிழகத்தில் பாலாறும், தேனாறும் பாய்கிறது என்று  பேசுகிறார் அமைச்சர்.  மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லையாம். எங்கே இருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார் என்று தெரியவில்லை. ஒருவேளை என்ன சொல்வது என்று  தெரியாமல் இப்படியான வார்த்தைகளை உபயோகிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு நாளும், ஆள்பவர்கள் அவர்களின் நம்பகத்தன்மையை இழந்து வருகிறார்கள். வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் எந்த நேரமும் வரப்போகும் சட்டசபைத்  தேர்தலில் டெப்பாசிட்டை காப்பாற்றுமா அதிமுக என்பதே கேள்வியா உள்ளது. அந்த கவலை எதுவும் இல்லாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு போவதை,  மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்.

இவை யெல்லாம் எதிர்கட்சியான திமுகவுக்கு பலமாகத்தான் போய் சேரும். மறைமுகமாக திமுகவுக்கு உதவுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னோட்டமாக இந்த வார்த்தைகள் வருகின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது.

இந்த கழக ஆட்சிகளில் இங்கிருப்போர் அங்கே போவது, அங்கே இருப்போர்  இங்கு  வருவது  என்று நாம் பார்க்காத ஆட்கள் இல்லை. இப்போதை அதற்கு தயார் படுத்திக் கொள்கிறார்கள் போலும். அவர்களின் அரசியல் எப்படியோ போகட்டும்.

நாட்டு மக்கள் இனியும் இவர்களை நம்பி நல்லாட்சி தந்திடுவார்கள் என்று இருந்தீர்களேயானால் உங்களை ஆண்டவன் கூட காப்பாற்ற தயங்குவான் என்பதே உண்மை.

ஆக தமிழக அரசு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் பஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.  அதை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம்.

[:]

You may also like...

Leave a Reply