ஆனந்த சுரபி

Advertisements

வெயிலில் நடந்த களைப்பு. பசி – தாகம் உக்கிரமமான நிலை!
அந்த நேரம், சில்வர் தட்டில் அழகான ஆரஞ்சும் – மஞ்சள்நிறமும் கலந்த…
அல்போன்ஸா மாம்பழத்தை, நேர்த்தியான துண்டங்களாக நறுக்கி, அதன் சாறு, துண்டங்களின் மேலே தேங்கியும் – தேச்காமலும் சூரிய ஔியை வைரத்தைப் போல அது பிரதிபலித்தபடி,

நம்முன்னே நீட்டப் படுகிறது!
லபக்கென்று, பசிதாகத் தூண்டலால் அதை நீட்டியவர் யாரென்று கூட பார்க்காமல், வாயில் போட்டு, ஒரு இரண்டு சவைப்பு…
ஐயகோ, ஆகா, இறைவா இது என்ன ஆனந்தம்; என்ன ருசி…
இத்தனை ஆனந்தமும்,ருசியும் எனக்குள்ளே எங்கே புதைந்திருந்தது!
உடனே அடுத்த துண்டம். உடனேஅதற்கடுத்தத் துண்டம். உடனே, அப்புறம் உடனே…அடுத்தடுத்தத் துண்டங்கள்…!
ம்…அப்பா! போதும், போதும்! திகட்டி விட்டது!
ஆனால் இன்னமும் அல்போன்ஸ துண்டங்கள் தட்டில் மீதி ஏராளமாக இருக்கின்றன..மிச்சமாக!
கொஞ்சம் நிற்க :
முதல் துண்டம் வாயில் போட்டு சவைத்தவுடன் ஆனந்தம் எழுந்ததல்லவா!
நாம் அந்தத் துண்டத்தை மாத்திரம், ஏன் மாறி மாறி சவைத்துக் கொண்டே இருப்பதில்லை? 
அந்தத் துண்டம் சுவை கொடுத்தது உண்மையென்றால், அந்தச் சுவை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டுமல்லவா? மறு துண்டத்தை கையிலெடுப்பானேன்?
அடுத்தடுத்தத் துண்டுகள் சுவை கொடுத்த வண்ணம் இருந்து கொண்டேயிருக்கையில், தட்டிலும் துண்டங்கள் மிச்சம் இருக்கையில், 
அது என்ன போதும்..போதும் என்ற உணர்வு, அத்தட்டைத் தள்ளி வைத்து விட்டதே?
ஈவு :
அல்போன்ஸாவை உண்டதன் நோக்கம் சுவைக்கானதல்ல! ஆனந்தத்திற்காக அல்ல!
பின்னே?
உடலின் பசிக்காக,

அல்போன்ஸா, அந்த உடலை காப்பாற்றத் தேவைப்பட்டது. அதை தனதாக்கிக் கொள்ள இந்தச் சுவையையும், ஆனந்தத்தையும், அந்த உடல் வாரி வழங்கியது.
உடல் எங்கிருந்து இந்த ஆனந்தத்தைப் பெற்றது தற்காலிகமாக? என்ற கேள்வி இங்கே எழ வேண்டுமல்லவா?
அது  “ஆனந்த சுரபி” ஆன்மாவிடமிருந்தே அவ்வானந்தத்தைப் பெற்றது!
ஏனெனில்…வேறு போக்கிடம் கிடையாதல்லவா இவ்வுடலுக்கு!!
ஆக, நம்முடைய ஒவ்வொரு இன்பமும், ஆனந்தமும், சுவையும்
நாம் ஆன்மாவை தீண்டும் பொழுதே, நமக்கு வாய்க்கின்றது!
அப்படி, அதைத் தீண்ட வைக்க ஒரு “தூண்டுவான்” stimuli தேவைப்படுகிறது.
அந்த stimuli தான்…
ஒரு அல்பைான்ஸாவாகவோ, உடலுறவிற்கான பெண்ணாகவோ, போதைக்கான ஆல்கஹாலாகவோ, இன்னும் பல இத்யாதிகளாகவோ இருக்கின்றது!
இந்த இத்யாதிகளை எப்போதும் கைவசம் – stock வைத்துக் கொள்ளவே நாம் வெறித்தனமாக உழைக்கிறோம் தினமும், என்பது தெளிவு!
இன்னும் நிற்க :
ஐயா…
இவ்வளவு கஷ்டப்பட்டு, அந்த ஆனந்தததை, இத்தகைய stimuliக்கள் வாயிலாக, தற்காலிகமாக, அவ்வப்போது, பெறுவதைக் காட்டிலும்…
நிரந்தரமாக அது, அந்த ஆனந்தம் நமக்கே நமக்குச் சொந்தமானால் எப்படி இருக்கும்?
இந்த நியாயமானக் கேள்வியில் பிறந்ததுதானய்யா இந்திய ஆன்மிகம்!
அல்போன்ஸாவைத் தீண்டியதால் நமக்குள் உள்ள ஆனந்தம் வெளி வந்தது. பெண்ணைத் தீண்டியதாலும், ஆல்கஹாலைத் தீண்டியதாலும்,
நமக்குள்ளே உள்ள இன்பமல்லவோ ஊற்றெடுத்தது!
இனி, இந்த இன்ப ஊற்றெடுப்பை, நாமாக சுயசார்பில், எதையும் தீண்டாமல் பெற்றால்தான் என்ன?
சிப்..சிப்பாக அமிர்தத்தை உறிஞ்சாமல், அவ்வமிர்தப் பாத்திரத்திற்குள்ளேயே லொபக்கென விழுந்து விட்டால் என்ன?
நீங்கள் எல்லோரும் வாருங்கள். நாம் சேர்ந்தே விழுவோம். பெறுவோம் ஆனந்தத்தை நிரந்தரமாக!
அதற்கு,
ௐ எனும் ஏணி மீதேறி, ஆன்மா நிறைந்திருக்கும், கால -வெளி -காரணம் கடந்த ஆன்ம குவளைக்குள் குதித்திடுவோம் நாம்!!

 You may also like...

Leave a Reply