திருக்குறளுக்குப் பீடம்

Advertisements

                மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கத்தில் நூற்றிஅய்ம்பது ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் திருக்குறளுக்குப் பீடம் அமைத்துத் திருக்குறள் பீடாதிபதியாக விளங்கியவர் அழகரடிகள்.
                மாம்பாக்கத்தில் மாணிக்கம்மாளுக்கும், சுப்புராய பிள்ளைக்கும் 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் பிறந்தார். இயற்பெயர் பாலசுந்தரம். மாம்பாக்கத்தில் பள்ளிப் படிப்பினை முடித்தார். பின்னர் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றார். சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
                தமிழ் மீது ஆர்வம் கொண்டு, தனித் தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
                சுகவனம் சிவப்பிரகாசனார் எழுதிய ‘ *குட்டிக்குறள்*’ என்னும் நூலின் முதல் குறளான “ *உலகுக் கெல்லாம் ஒரு பொருள் முதலே*” என்னும் பாவிற்கு சிறப்பான விளக்கவுரை ஒன்றை எழுதி அளித்தார். அவரது விளக்கவுரையை அனைவரும் பாராட்டினார். இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த எம்.எஸ்.எச். தாம்சன் என்னும் மேனாட்டறிஞர் பாராட்டினார். அதனால், அவரது அறிவு வெளிச்சம் வெளிநாடு வரை பரவியது.
                மறைமலை அடிகள் இயற்றிய ‘ *திருவெற்றிமுருகர் மும்மணிக்கோவை*’ என்னும் நூலுக்கு உரை எழுதினார். அந்த உரை நூலின் கருத்தைக் கண்டு மறைமலை அடிகள் வியந்து பாராட்டினார். இவருடைய இயற்பெயருக்கு ஏற்ப ‘ *இளவழகனார்*’ என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

                மாணவர்களுக்கு இலக்கிய வகுப்புகள் நடத்தினார். அவரிடம் பயின்ற பலர் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தனர்.
                தமது இருபத்தொன்றாவது வயதில் தங்கம்மாள் என்பவரை மணந்து கொண்டார்.
                தமது வாழ்க்கையை எழுத்திற்கும், சொல்லிற்கும் அர்ப்பணித்து, பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். கேட்போர் விரும்பும் வண்ணம் சிவநெறி பற்றிய இலக்கண, இலக்கியம் குறித்து பல சொற்பொழிகள் நிகழ்த்தியுள்ளார்.
                கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், மறைமலை அடிகள் தலைமையில் ‘சிலப்பதிகாரத்திற்கு’ விளக்கவுரை அளித்தார் இளவழகனார். அதைக் கேட்ட மறைமலை அடிகள், “ *நான் நாற்பது ஆண்டுகளாக அறிந்த சிலப்பதிகாரத்தில் இவ்வளவு நுட்பமான – அருமையான கருத்துக்களையும் முடிவுகளையும் கண்டதில்லை*” எனப் புகழ்ந்து பாராட்டினார். மேலும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் புலவராய் அமர்ந்து, முன்னரே உரைகண்ட பல நூல்களைச் சீராக்கினார். பல நூல்களுக்கு உரை கண்டார்.
                ‘தொல்காப்பியத்திற்குச் சிறந்த குறிப்புரை ஒன்றும், தொல்காப்பியத்தின் ஒரு இயலான அகத்திணைக்கு விரிவான விளக்கவுரையும் எழுதினார். ‘கலித்தொகை’க்கு அரிய ஆராய்ச்சி முன்னுரை ஒன்றும் எழுதி வெளியிட்டார். சங்க இலக்கியங்களில் முன்னூறு பாடல்களைத் திரட்டி ‘சங்க இலக்கிய இன்கவித் திரட்டு’ என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகளை எழுதி அளித்தார். மேலும், ‘ *சங்க நூற்கட்டுரைகள்*’ என்னும் இரு தொகுதிகள் வெளியிட்டுள்ளார்.
                ‘ *பதினெண்கீழ்க் கணக்கு*’ ‘ *முதுமொழி*“ *காஞ்சி*” *அதிவீரராமர் அறநெறி*’ ‘ *சிவப்பிரகாசர் செந்நெறி*’ ‘ *நாலடியார்*’ முதலிய நூல்களுக்குச் சிறந்த உரை நூல்களை எழுதியுள்ளார்.
                மேலும், ‘ஒளவையார் திருவுள்ளம்’ ‘ஒளிவழிபாடு’, ‘தணிகை மலை’ ‘திருமூலர் அருள் மொழிகள்’ ‘திருக்கழுக்குன்ற மாட்சி’ ‘சொல்லரசர்’ முதலிய நூல்களை படைத்து தமிழருக்கு அளித்துள்ளார்.
                திருவாவடுதுறை ஆதினம் இவரது சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியதுடன், மடத்திலேயே தங்கி நூல்கள் இயற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
                ஞாயிறுதோறும் சென்னையில் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார். ஐந்து ஆண்டுகள் மாதந்தோறும் திருமந்திர விரிவுரை நிகழ்த்தினார். இதன் நிறைவுச் சொற்பொழிவை திருவாவடுதுறை சென்று அங்குள்ள திருமூலர் சந்நிதியில் நிகழ்த்தினார். திருவாவடுதுறை அம்பலவாண பண்டாரத்தாரால் ‘திருமந்திரப் பேராசிரியர்’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. மேலும், பத்தாயிரம் வெண்பொற்காசுகளைப் பரிசாக வழங்கிப் பாராட்டினர்.
                வள்ளலார் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக ‘ *இராமலிங்கர் வரலாறும், திருவருட்பா ஆராய்ச்சியும்*’ என்ற நூலை வெளியிட்டார்.
                சென்னை இறைபணி மன்றத்தின் சார்பில், 1950 முதல் 1962 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து ‘ *பெரிய புராண*’ விரிவுரை செய்து பெரிய சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
                மெய்கண்ட நூல்கள் பதினான்கினைப் பல்லாண்டுகளாய்ப் பாடம் சொல்லி நிறைவேற்றினார். அதையொட்டி பதினான்கு நாட்கள் மெய்யுணர்வு விழா நடத்தப்பட்டது. அவ்விழாவில் ‘ *அழகரடிகள்* ’ ஆனார். திருக்குறள் பீடாதிபதியுமானார்.
                மைசூர், புவனேசுவரம், கொல்கத்தா, பேலூர், தட்சணேசுவரம், கயா, காசி, மும்பை, கர்நாடகம், ஆந்திரா முதலிய பல இடங்களுக்கும் சென்று சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
                தமக்குக் கிடைக்கும் பரிசுத் தொகையினையும், அன்பளிப்புகளையும் சேமித்து, மாம்பாக்கத்தில் 150 ஏக்கர் நிலத்தை வாங்கினார். ஆரம்ப நிலையிலிருந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கினார். எளியதாக இருந்த குருகுலம் வளர்ந்து, 1960 ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பீடமாக உயர்ந்தது.
                ‘சிவநெறிச் செஞ்சொற்கொண்டால்’ ‘சிந்தாந்தச் செஞ்ஞாயிறு’, ‘திருக்குறள் அடிகள்’ முதலிய பட்டங்களை தமிழ் அறிஞர்கள் உலகம் வழங்கிப் பாராட்டியது.
                அழகரடிகள் தமிழக்குச் செய்த தொண்டு தமிழ் மொழி உள்ளளவும் நிலைத்து நிற்கும் .You may also like...

Leave a Reply