சொத்து தகராறில் சசிகலா-நடராசன் குடும்பம்

Advertisements

நடராசன் குடும்பத்தோடு நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறார் சசிகலா. ‘ அவருடைய சொத்துகளில் எதுவும் எனக்கு வேண்டாம். அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். பரோல் முடிவதற்குள்ளாவே சிறைக்குச் செல்ல விரும்புகிறேன்’ என உறவினர்களிடம் கொதிப்போடு பேசியிருக்கிறார் சசிகலா.
சென்னை, சோளிங்கநல்லுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடராசன், கடந்த 20-ம் தேதி காலமானார். இதனையடுத்து, 15 நாள் பரோல் விடுப்பில் சிறையில் இருந்து வெளியில் வந்தார் சசிகலா. தஞ்சாவூரில் உள்ள அருளானந்தம் நகரில் வைக்கப்பட்டிருந்த நடராசன், உடல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடராசனின் சொத்துகள் தொடர்பாக மன்னார்குடி குடும்பங்களுக்கு இடையில் பெரும் மோதல் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா உறவினர் ஒருவர், “நடராசனுடன் உடன்பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். நான்கு ஆண்கள். இரண்டு பெண்கள். விளார் சாமிநாதன் குடும்பத்துக்கு மூத்தவர். இவர் தவிர, எம்.ராமச்சந்திரன், பழனிவேல், சம்பந்த மூர்த்தி ஆகியோர் உள்ளனர். நடராசனுக்கு விளார் கிராமத்தில் வீடு ஒன்று உள்ளது. இதுதவிர, ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டிருந்தார். இந்தச் சொத்துகள் அனைத்தும், மனைவி என்ற அடிப்படையில் சசிகலாவுக்குத்தான் வந்து சேர வேண்டும். அப்படிச் செல்வதை நடராசன் உறவுகள் ரசிக்கவில்லை.
‘இதுநாள் வரையில் அந்தம்மா நமக்கு என்ன செய்தது? சொத்துகளை எல்லாம் எழுதிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என நடராசன் குடும்பத்தில் உள்ள சிலர், போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத சசிகலா, ‘எனக்கு எந்தச் சொத்துகளும் வேண்டாம். எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்குங்க. எனக்கு இங்க இருக்க பிடிக்கவில்லை’ எனக் கூறிவிட்டார். இதன்பிறகு, உறவினர்கள் எந்த வார்த்தைகளும் பேசவில்லை. தன்னைச் சுற்றி நடக்கும் சில விஷயங்களால் அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா. பரோலில் வெளிவந்த இரண்டாவது நாளே, ‘நான் சங்கம் ஓட்டலில் தங்கிக் கொள்கிறேன்’ எனப் பிடிவாதம் பிடித்தார். அவரை சமாதானப்படுத்திய உறவினர்கள், ‘அப்படிச் செய்யக்கூடாது. கணவர் இறந்த மூன்று நாள்கள் வெளியே போகக்கூடாது’ எனக் கூற, ‘ அவர் (நடராசன்) அப்படி எந்த சம்பிரதாயத்தையும் பார்த்ததில்லை. மன்னையார் சம்பிரதாயப்படி எரிப்பதுதான் வழக்கம். அவர்கள் புதைத்துவிட்டார்கள். நாம் சொல்வதை யாரும் கேட்பதில்லை. இங்கு நாம் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என உறுதியான குரலில் பேசினார். அவரை சமாதானப்படுத்தி தங்க வைத்திருக்கிறோம்” என்றார் விரிவாக.
“நடராசனுக்கு சடங்குகள் செய்வதிலும் ஏகப்பட்ட மோதல்கள் வெடித்தன. ‘சடங்குகளை முதலில் செய்ய வேண்டியது மச்சானா? பங்காளிகளா?’ என மோதல் ஏற்பட்டது. மச்சானுக்கு திவாகரன் முறை செய்வதற்கு முன்னரே, பங்காளிகள் சடங்குகளைச் செய்து முடித்துவிட்டனர். இதனால் கொதிப்பின் உச்சத்துக்கே போய்விட்டார் திவாகரன். ‘எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் இங்கு இருக்க வேண்டுமா? போக வேண்டுமா?’ என ஆவேசப்பட, நடராசன் உறவுகளோ, ‘உங்க அரசியலை வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வீட்டுக்கு நீங்கள் யார்? வெளியே போய்விடுங்கள்’ எனக் கத்தி தீர்த்துவிட்டனர். இதனை எதிர்பார்க்காத திவாகரன், அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டார். நடராசன் உடலை விளார் வீட்டுக்குக் கொண்டு போக நினைத்தார் சசிகலா. அதுவும் நடக்கவில்லை. தனக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதையை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவேதான், பரோல் காலம் முடிவதற்குள்ளாக கிளம்ப முடிவு செய்திருக்கிறார்” என்கின்றனர் குடும்ப உறவுகள் சிலர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com