நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி  மோடியின் செல்வாக்கு நீடிக்கிறதா?  –   ஆர்.கே.

Advertisements

நடந்து வரும்  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் தெலுங்கு தேசம் தலைமையில் கொண்டு வந்தன.

இத்தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப் பெற்று,  நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பிற்குவிடப்பட்டது. அதில் பாஜக அரசு 325 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்கட்சிகள் 126 வாக்குகள் பெற்று தீர்மானம் தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது. ஆக பாஜக அரசு தொடர்ந்து நடைபெறுவதற்கு சபை ஆதரவளித்துள்ளதாக தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.

இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. இது ஏற்கனவே போதிய பலம் இல்லாமல் இத்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இத்தீர்மானம் வெற்றி பெறாது என்று சொல்லபட்டாலும். மோடியின் ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்துவோம் என்று சூளுரைத்து படை திரட்டி பாராளுமன்றம் சென்ற எதிர்கட்சிகள். போதிய வேகத்தில் ஆளும் கட்சியை தங்களது குற்றச்சாட்டுகளால் திணறடிக்கும் வாதங்களையும், ஆதரங்களையும் கொடுக்க தவறி,  தலைகுப்புற கவிழ்ந்ததாகதான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

இதில் ஹைலைட்டாக ராகுல்காந்தி நடத்திய நாடகம் தேவையில்லாத சர்ச்சையையும் பொது வெளியில் கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் தனது உரைக்குப்பின் தங்கள் கட்சியை உயர்த்தி பேசிய ராகுல்,  எங்கள்  மீது  ஆளும் பாஜக எத்தனை வெறுப்பைக் காட்டினாலும்,  நாங்கள்  அன்பு வழியிலேயே மோடியையும், அவர்கள் ஆதரவாளர்களையும் அன்பு வழிக்கு கொண்டு வருவோம் என்று கூறிவிட்டு, நேரடியாக அதை நிரூபிக்கும் வண்ணம், மோடி இருக்கும் இருப்பிடத்திற்கு சென்று அவரை கட்டிணைத்து நாடகம் ஆடியது பரபரப்பாக பேசப்பட்டது மட்டுமல்லாமல், தனது இருக்கைக்கு திரும்பி வந்த பின் தனது அருகில் இருந்த சக உறுப்பினர் சிந்தியாவைப் பார்த்து கண்ணடித்தது,  உண்மையில் ராகுல் பேசியது யதர்த்தமா? அல்லது நாடகமா? என்ற கேள்வியை எழுப்பியது.

இதற்கிடையில் ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஏற்பட்ட குளறுபடிகளை ராகுல் கண்டித்து பேசி,  இராணுவ அமைச்சர் நிர்மால சீதாராமன் அவைக்கு பொய்யான தகவலை தருகிறார் என்று கூற,  அவை  அல்லோகலப்பட்டது. தான் ஆதாரங்களுடன் தான் பேசுகிறேன் என்று நிர்மலா சீதாராமன் எடுத்துக் கூற, எதிர்கட்சி, ஆளுங்கட்சிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபோக வழக்கமான குற்றச்சாட்டுகளை மோடியின் மீது எதிர்கட்சிகள் வாசித்தனர். தீர்மானத்தை கொண்டு வந்த தெழுங்கு தேசம்  ஆந்திர பிரதேச மாநில அரசுக்கு தனி அந்தஸ்து அளிப்பது குறித்து தங்களுக்கு அளித்த  வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றாமல் கைகழுவிட்டது என்று குற்றம் சாட்டினர்.

ஆக மோடி எதிர்ப்பு பாராளுமன்றத்தில் பிசுபிசுத்துப் போனது என்பது என்னவோ உண்மை. எது எப்படி இருந்தாலும்,  ஆளும் பாஜக, எதிர்கட்சிகள் மக்கள் மன்றத்தை சந்திக்கும் போது ஏற்படபோகும் கூட்டணி கலாட்டா, பிரச்சார யுக்தி,  ஆளும் கட்சியின் செயலற்ற தன்மையை ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லும் தன்மை, பண பலம்,  அதிகார பலம்  இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு வரப்போகின்ற 2019 பொதுத் தேர்தல் பாஜகவுக்கு பலமா அல்லது பலஹீனமா என்றால் தனிப்பெரும்பான்மையை பாஜக எடுக்க இயலாது என்றும்,  கூட்டணி ஆதரவோடுதான் ஆட்சியமைக்க முடியும் என்றும் இன்றை கணக்கில் சொல்லப்படுகிறது. இருக்கும் 10 மாதங்களில் இன்னும் ஏற்பட போகும் மாற்றங்களை வைத்தே இறுதியாக எதையும் சொல்ல முடியும். இன்றைய தேதிக்கு இன்னும் பாஜக தாமரையே ஓங்கி நிற்கிறது.

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com