தி.மு.க. தலைவரானார் ஸ்டாலின் –  ஆர்.கே.

Advertisements

நீதிக்கட்சியில் ஆரம்பித்து தி.க. தொடங்கி தி.மு.கவாக பரிணிமித்து நிறுவனர் அண்ணாத்துறைக்குப் பிறகு 50 ஆண்டு காலம் மு.கருணாநிதி அக்கட்சியின் தலைவராக அக்கட்சியை வழி நடத்தி வந்த பிறகு, சமீபத்திய கருணாதிநிதி மறைவிற்குப் பிறகு அக்கட்சியின் தலைவராக முறைப்படி  தி.மு.க பொதுக்குழு கூடி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது.

தி.மு.கவின் மூன்றாவது தலைவராக பொறுப்பேற்கிறார் ஸ்டாலின். முதலாவதாக அண்ணா, இரண்டாவதாக மு.கருணாநிதி, இன்று மு.க. ஸ்டாலின். 65 வயதாகும் திரு.ஸ்டாலின் தனது இளம் பருவத்தில் இருந்து கட்சிப் பணிகளில் பங்கேற்று, சிறிது சிறிதாக கட்சிப் பதவிகளை பெற்று, தனது பங்களிப்பை செய்து, இறுதியாக அரசு ரீதியாக துணை முதல்வராகவும், கட்சிரீதியாக செயல்தலைவராகவும், பங்கேற்ப்பைச் செய்துள்ளார். இன்று கட்சியின் அதிகாரமிக்க பதவியான தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

மு. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் திமுக கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர்.  மிகப் பெரிய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் இருவேறு துருவங்களாக இருந்து கட்சிக்குள் அரசியல் செய்பவர்கள்  கருணாநிதியின் மகன்களான மு.க அழகரி மற்றும் மு.க. ஸ்டாலின்  இடையே நீண்ட நெடிய காலமாக போட்டி இருந்து வந்தது. இது வாரிசு அரசியல் உள்ளதை நிருப்பிப்பதாக இருந்துள்ளது. திமுக கட்சி  கருணாநிதியின் உழைப்பில் மட்டுமே வளர்ந்த கட்சி அல்ல. அவர் முக்கிய பங்காற்றிய நபர் மட்டுமே. ஐந்து முறை முதல்வராக அக்கட்சியினரின் உழைப்பால் அப்பதவியை வகித்தவர். இவ்வளவு இருந்தும், அக்கட்சியில் ஜனநாயக குரல்கள் மலிந்து, அக்கட்சி கருணாநிதியின் குடும்ப கட்சியாக, குடும்ப உறுப்பினர்களின் லாபி செயல்பட ஆரம்பித்தது வெட்ட வெளிச்சம்.

இன்று அதன் உச்சமாக வருகின்ற 5 ம் தேதி மு.க. அழகிரி 5 லட்சம் பேரைத் திரட்டி உண்மையான தி.மு.க யார் என்பதை நிரூப்பிக்கப்  போவதாகவும், தன்னை திமுகவில் சேர்க்கவிட்டால் அதன் பின்விளைவுகளை கட்சி சந்திக்க வேண்டியிருக்கும் என்று சவால் விட்டுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை, சமூக நல சீர்திருத்தங்களை,  மதச்சார்பற்ற சிறுபான்மை நலம் விரும்பியாக கடந்த 50 ஆண்டு காலம் நடைபோட்ட திமுக, தற்போது ஆன்மிகத்தை அரவணைக்கும்  தலைவரை தலைமையாக கொண்டுள்ளது. இப்படியாக ஸ்டாலின் மீது விமர்சனங்கள் நெடுங்காலமாக உள்ளது. இனி இவரின் தலைமையில் திமுகவின் கொள்கையில் எப்படி வளம் பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கழகங்கள் இல்லா திமுகவை தமிழகத்தில் உருவாக்குவோம் என்று சூளுரைத்து இன்று அதில் 50 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது பாஜக. அதிமுக 3 பிரிவாக இன்று உள்ளது. அதில் ஏகப்பட்ட குழப்பங்கள். இதை பாஜக அமித்ஷா குழுவினர் சரியாக நடத்தி முடித்துள்ளனர். மீதி 50 சதவீதத்தை திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுகவை வழுவிழக்கச் செய்யும் செயல்களை அமித்ஷா செய்ய ஆரம்பித்துவிட்டார். கண்டிப்பாக அழகிரியுடன் சேர்ந்து திமுகவை வழுவிழக்கச் செய்யும் செயல்பாடுகள் இனி தீவிரமாக இருக்கும்.

அதற்கு ஆரம்பமாக இப்பொழுதே பாஜகவினர் அழகிரியை சந்தித்து வருவதாக தகவல் வருகின்றன. இது எல்லாம் ஸ்டாலினுக்கு பாஜக மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு போட்டியாக உள்ள அழகிரியை வளர்த்து  விடும்  போக்காக இதை பார்கிறார். அதற்காக தனது பதவியேற்பு விழாவில் கடுமையாக பாஜகவை சாடியுள்ளார். முதலில் அண்ணன் பக்கம் போகும் பாஜகவை தன் பக்கம் கொண்டு வரும் நிலையாக நேசம் பாராட்டிய ஸ்டாலின், அமித்ஷாவிற்கு அழைப்பு கொடுத்து வாஜ்பாய் அஸ்தி மரியாதை தொடங்கி பல முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் மக்களிடையே, தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவவே, தனது நிலைப்பாட்டை மாற்றி, பாஜகவை எதிர்க்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டு, பாஜகவை எதிர்த்துள்ளார்.

ஆக பாஜக அவரிகளின் செயல்பாட்டில் முன்னேறி வருவது தெளிவாக தெரிகிறது. அவர்கள் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த  வேண்டிய திராவிட கழகங்கள் தடுமாறி நிற்கின்றன.

விரைவில் இதில் தெளிவான முடிவு எடுத்து பாஜகவை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இரண்டு திராவிட கட்சிகளும் எடுக்காவிட்டால், இரண்டு கட்சிகளும் பலம்  இழக்கும்  என்பதில் சந்தேகம் இல்லை.  ஸ்டாலின்  சாதிப்பாரா?  சரிவை சந்திப்பாரா என்பதை  பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும்.

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com