நாடு தழுவிய பந்த் பாஜகாவுக்கு இறுதி எச்சரிக்கையா?  –  ஆர்.கே.

Advertisements

நாங்கள் வந்தால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று வந்தவர்கள்தான்  இன்றைய  பாஜக அரசு. காங்கிரஸ் அரசின் ஊழல் புகார் பட்டியலை வாசித்து, நாடு பொருளாதார சீரழிவில் செல்கிறது. நாங்கள் வந்தால் எல்லாற்றையும் நிமிர்தி விடுவோம் என்று சவால்விட்டவர்கள் இவர்கள்.

இன்று நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ரூபாயின் மதிப்பு 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்னும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்காமல், உலக பொருளாதாரத்தின் தாக்கம் தான் இது, இது எல்லா நாடுகளையும் பாதிப்பது போல், நம்மை பாதித்துள்ளது என்று சொல்லி வருகிறது.

கேஸ் விலையேற்றம், பெட்ரோல் விலையேற்றம், ரேசன் கட்டுப்பாடுகள் என்று அன்றாட மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. அதே சமயம் கார்ப்பரேட்களுக்கு வரி  சலுகைகளை வாரி வழங்குகிறது. அதானி, அம்பானி போன்ற தொழில் அதிபர்கள் உலகின் மிகச் சிறந்த பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுகிறார்கள். அதே சமயம் நாட்டின் வருமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் ஏற்றம் காணவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமனியன் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 84 ரூபாய்க்கு சென்னையில் விற்கப்படுகிறது. டீசல் 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கைகள் மிகுந்த சந்தேகத்தையும், அச்சத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. தன்னிச்சையாக நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று சொல்லியதன் மூலம் நாள்தோறும் பிரச்னைகள். நேற்று நாடு தழுவிய பந்த் எதிர்கட்சியான காங்கிரஸ் நடத்தியுள்ளது. அனைத்து  எதிர்கட்சிகளும் இணைந்து நாடு தழுவிய பந்தை நடத்தி ஆளும் பாஜக அரசுக்கு இறுதி எச்சரிக்கை செய்துள்ளன. தமிழகம் தவிர்த்து நாடு முழுவதுமாக முடங்கிப் போனது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும், அவசர கால சிகிச்சைக்கு செல்பவர்களின் பாதிப்பும் செய்திகளாக வ்ந்துள்ளன. இது ஆளும் பாஜக அரசின் நிர்வாக தோல்வியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

நாடு தழுவிய பந்தை எதிர்கட்சிகள் வெற்றி என்று கொண்டாடிய போதும், தோல்வி என்று பாஜக விமர்சித்துள்ளது. ஆளும் கட்சி,  எதிர்கட்சிகளின் பொம்மலாட்ட  பொம்மைகளாக மக்கள் மாறியுள்ளனர். எதிர்த்து பேசுபவர்கள் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாவும் சித்திரிக்கப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றனர். சமீபத்தில் மக்கள் பணியாற்றி வரும் சமூக செயல்பாட்டாளர்களை மாவோயிஸ்ட் என்று சொல்லி இந்த அரசாங்கம் கைது செய்ய, உச்ச நீதிமன்றம் அவர்களை வீட்டு காவலில் வைத்து விசாரிக்க சொல்லியது. இப்படியாக ,இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால்  வன  வாசம் என்ற சொற்றொடருக்குப் ஏற்ப இந்த அரசு நடந்து வருவதாக குற்றம் சாட்டாதவர்கள் இல்லை. மோடி அரசு தடுமாறி நிற்கிறது என்பதே உண்மை. நமது கெட்ட காலம் இன்னும் ஒரு ஆறு மாத காலமே கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று ஒருவருக்கு ஒருவர் சமாதானம் சொல்லும் நடைமுறைகளை சோசியல் மீடியாவிலும், நேரிலும் பார்க்க முடிகிறது.

சொந்த நாட்டில் 84 ரூபாய்க்கு விற்கும் இந்திய அரசு,  அயல் தேசங்களுக்கு 35 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ஏற்றுமதி செய்கிறது. இச்செயலை எப்படிப் பார்பது. என் மக்கள் துன்பப்படட்டும், அயலார் நன்மை அடையட்டும் என்பது போல் உள்ளது.  பெட்ரோலுக்கான உற்பத்தி வரி  400 மடங்காக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உற்பத்தி வரியை  பெட்ரோல் மேல் உயர்த்திக்  கொண்டே போவது தான் இதற்கு காரணம் என்றும், மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைக்க வேண்டும் என்ற குரலுக்கு இருவரும் செவி சாய்க்க மறுக்கின்றனர். இருவர் சொல்லுவதும் குறைத்தால் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்பதே. மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய மக்களிடம் இருந்து அதிகப்படியாக பிடுங்கி செய்வதாக சொல்லுவது கேலிகூத்தாக இருக்கிறது. உண்மையில் இவர்களுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.  மக்கள் தவறான ஒருவரை தேர்ந்தெடுத்துவிட்டோம் என்று  நொந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் முடிவு காலத்தை எதிர்பார்த்து  காத்திருக்கிறார்கள். இது மோடி அரசுக்குகான இறுதி எச்சரிக்கைதான். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com