அதிமுகாவில் அதிரடிக் குழப்பம் – ஆர்.கே.

Advertisements

குழப்பத்திற்கு பெயர்போன கட்சி என்றால், அது அதிமுக கட்சி என்று சொல்லலாம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பின் எடுப்பார் கைப்பிள்ளை போல், யார் ஆதரவில் கட்சியின் காலத்தை தள்ளலாம் என்ற நிலையில், அதிமுக ஆட்சி, மத்திய ஆளும் பாஜக கட்சியின் தயவில் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது.

சமீபகாலமாக பாஜகவுடனும் அதன் உறவு சரிந்து வரும் சூழ்நிலையில் எந்த நிமிஷம் என்ன நடக்கும் என்று தெரியாத அரசியல் குழப்பங்களோடு இந்த அரசு சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு சமீபத்திய உதாரணம்  இரண்டு நாட்களுக்கு முன் அமமுக கட்சியின் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்து ஒரு வருடகாலமாக அமமுக கட்சியின் டிடிவி தினகரனை சந்திக்க நேரம் கேட்டு வருவதாகவும். 2017 ஜுலை 12 ம் தேதி இருவரும் ஒரு முறை சந்தித்தபோது,  எடிப்பாடி ஆட்சியை கவிழ்த்துவிட்டு டிடிவியை முதல்வராக்குவதாக  துணை முதல்வர் பன்னீர் செல்வம் சொன்னதாக பரபரப்பை கிளப்பினார்.

அது அரசியல் களத்தில் பெரும் தகிப்பை உண்டாக்கியுள்ளது. காரணம் யாருக்கும் தெரியாமல் தனது எதிரி என்று கூறி வரும் டிடிவி தினகரனை பன்னீர் செல்வம் சந்தித்தாக கூறுவதை எப்படி நம்புவது என்று பலரும் கேட்க, எங்களிடம் சந்தித்தற்கான ஆதாரம் உள்ளது,  தேவைப்படும் பொழுது அதை வெளியிடுவோம் என்றனர் டிடிவி தரப்பினர்.

தர்ம  யுத்தம்  நடத்தும்  பன்னீருக்கு தர்ம சங்கடமான நிலை உருவானது. தனது தரப்பு நியாயத்தை பொது வெளிப்படுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில் தினகரனை சந்தித்தது உண்மையே. ஆனால் இருவருக்கும் நண்பரான ஒருவரின் வீட்டில் டிடிவி தரப்பினர் கொடுத்த தொடர் அழுத்ததால் தான் தான் சந்தித்ததாகவும், அது சமயம் டிடிவி மனம் திருந்திருப்பார் என்று தாம் நம்பியதாகவும் கூறினார். ஆனால் டிடிவியிடம்  எந்த மாற்றமும் இல்லை. ஆகையால் டிடிவியின் கோரிக்கைகளை தான் நிராகரித்ததாகவும் கூறினார்.

சந்திப்பில் தனக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று டிடிவி அழுத்தம் கொடுத்ததால் தான் கோரிக்கையை நிராகரித்து விட்டு திருப்பியதாக கூறினார்.

இது எந்த அளவிற்கு நம்பும்படி உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. காரணம் டிடிவி தரப்போடு ஒட்டோ உறவோ இல்லை என்ற யாருக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கினாரோ, அவரிடமே சமாதானம் பேச சென்றதாக  சொல்வது, இவர்கள் எத்தனை அரசியல் நாகரிகத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்று என்னத் தோன்றுகிறது.

டிடிவி பேசும் பொழுது, தான் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பன்னீர் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக நடந்த உண்மையை சொன்னது இவ்வளவு பெரிய விஷயமாக பத்திரிக்கைகள் கொண்டு வருவார்கள் என்று அறியவில்லை. தங்க தமிழ் செல்வன் சொன்னது போல் சந்திப்பு நடந்ததே என்றே கூறினார். இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து திரைமறைவு வேலைகள் நடந்ததாக ஊருக்குச் சொல்லியுள்ளனர்.

இதில் டிடிவி தனது ஆதரவாளர் அனைவருக்கும் தெரிந்து சென்றதாகவும், ஆனால் பன்னீர் தனது ஆதரவாளர்களுக்கே தான் சந்தித்தது தெரியாது என்று சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது,  தர்ம யுத்தமா? இல்லை அதர்ம யுத்தமா? என்ற கேள்வி பிறக்கிறது. மொத்தத்தில் முதல்வர் இபிஎஸ் ஒட்டு மொத்த குழப்பத்தில் உள்ளார். கூடிய விரைவில் 18 எம்எல்ஏ தகுதி நீக்க உத்தரவில் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அதிமுக ஆட்சி நீடிக்குமா என்பது கேள்விக்குறியே.

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com