நானும் பாதிக்கப்பட்டேன் (#Metoo)  அவசியமா? அநாவசியமா?  – ஆர்.கே.

Advertisements

அமெரிக்காவில் பாலியல் குற்றங்களை பொதுவெளியில் சொல்லி பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கான மன ஆறுதலை தேடும் விஷயமாக தொடங்கப்பட்ட ஒரு இயக்கமே மீ டூ என்பது.  ஆதாவது பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் நானும் பாதிக்கப்பட்டேன் என்று சொல்லி பொது வெளியில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, குற்றவாளிகளை மானபங்கப்படுத்தும் செயல்.

இது தற்போது இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. சினிமாவில் தொடங்கி பத்திரிக்கை மற்றும் அரசியல் வரை நீண்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் பல துறைகளில் நீளும் என்று நம்பப்படுகிறது.  ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் பாதிப்புகளை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பொது வெளியில் பகிர்ந்து வருகின்றனர்.

இதில் பல பிரபலங்கள் மாட்டிக் கொண்டு திண்டாடிவருகின்றனர். பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்கள் மீது இந்த குற்றச்சாட்டின் படி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நானபடேகர் மற்றும் அலோக்நாத், சாஜித்கான் மற்றும் பல திரைதுறை சம்பந்தப்பட்டவர்கள்,  இசைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் அம்பலமாகியுள்ளனர்.

தங்களுக்கான பணி நிரந்தரம் மற்றும் பணி தொடர்ச்சிக்காக மேலதிகாரிகளின் சீண்டல்களுக்கு பலியாகும் நிலை நிலவி வருவதாக பகிரங்கமாக சொல்லி வருகின்றனர். இது இலை மறை காயாக இருந்த விஷயம் இன்று பட்டவர்த்தனமாக இன்னார் இதைச் செய்தார் என்று சொல்லும் நிலைக்கு மாறியுள்ளது. இது பலருக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இயக்கமாகவும், இனி இதைப் போல் குற்றச் செயல்களை எவனும் கனவிலும் நினைக்க முடியாது என்றும் பெண்கள் தைரியமாக வெளிக் கொண்டு வந்துள்ளனர். அவர்களை நாம் முழுமையாக பாராட்டக்  கடமைப் பட்டுள்ளோம். இன்னும் பலரும் அம்பலமாக வேண்டியுள்ளது. அம்பலமாவார்கள் என்று நம்புவோம்.

இதில் குறிப்பாக கவிஞர் வைரமுத்து பாடகி சின்மயிக்கு பாலியல் தொந்தரவு செய்தார் என்று சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். இதை வைரமுத்து ஆதரமற்றது, உள்நோக்கம் கொண்டது, இதை கோர்டில் சந்திப்பேன் என்று சொல்லியுள்ளார்.   இதில் யார் பக்கம் உண்மையுள்ளது என்பதை கோர்ட் தீர்மானிக்கட்டும், அதே போல் மத்திய அமைச்சர் எம்.ஜே.  அக்பர்  மேல் இந்த குற்றச்சாட்டை 17 க்கும் அதிகமான பத்திரிக்கைப் பெண்மணிகள் சொல்லியுள்ளனர். அவர் இராஜினமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு முடிவில் கோர்டில் சந்திப்பேன் என்று அவரும் சொல்லியுள்ளார். ஆக நீதிமன்றம் இதற்கான சரியான வழிகாட்டுதல்களை செய்ய வேண்டும். அதை அரசாங்கங்களும், பொது நிறுவனங்களும் கண்டிப்பாக கடைபிடித்து பெண்களுக்குகான பாதுகாப்பையும், நீதியையும் பெற்றுத்  தர வேண்டும்.  இந்த மீ டூ அமைப்பு மீட்டுருவாக்கம் பெற்று மக்களிடையே பரவலாக வேண்டும்.  இது  அவசியமான ஒன்றே என்று நாங்கள் தீர்ப்பு கூறுகிறோம்.

You may also like...

Leave a Reply