திரைக்கு பின்னால்-முதல் மரியாதை

அந்தக் கலைஞனின் அக்கறையை அடுத்த நாள் காலையில் பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள். அடுத்த நாளில் இருந்து அவர், செருப்பு அணியாமல்தான் எல்லா நாளும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார். செருப்பு, அவர் தங்கியிருந்த அறையிலேயே கிடந்தது. அவர் செருப்பே இல்லாமல் நடிப்பதால் அவருடைய காலில் முள்ளோ, கல்லோ தைத்துவிடக் கூடாது என்ற கவனம்பாரதிராஜா உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு இருந்தது. அவர் நடிக்கப் போகும் இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி வைக்கச் சொல்லியிருந்தார்கள். அதைப் பார்த்துவிட்டு, ‘‘ஏன் அந்த இடத்தைப் பெருக்கறீங்க’’ எனக் கேட்டார். ‘‘உங்க கால்ல முள் தைச்சுவிடக் கூடாதேன்னுதான்’’ என இழுத்தார் பாரதிராஜா.
‘‘அட யாருப்பா நீங்க… பெருக்கறத நிறுத்தச் சொல்லு மொதல்ல. காட்லயும் மேட்லயும் இப்படித்தான் சுத்தமா பெருக்கி வைப்பாங்களா? இயற்கையா இருந்தாத்தானே சரியா இருக்கும்?’’ எனச் சொல்லிவிட்டார்.
பக்கம் பக்கமாக வசனம் இருக்கும் என்று எதிர்பார்த்தார் சிவாஜி.அதுவும் இல்லை! அண்ணே, இப்படி உட்காருங்க இத மட்டும் சொல்லுங்க என்று பாரதிராஜாவுக்கே உரிய ஸ்டைலில் படப்பிடிப்பு போகிறது. ஒருநாள், ‘அண்ணே,லைட் போகப்போகுது… சீக்கிரம் வாங்க என்கிறார். அண்ணே, அந்த மரத்துல கை வச்சு நில்லுங்க… அப்படியே திரும்பி நடந்துவாங்க…’ என இயக்குநர் சொல்ல, ‘டேய் நான் சிவாஜிடா… என்ன காட்சி, எதுக்கு நடக்கணும்.. என்ன சிச்சுவேஷன்னு கூட சொல்லாம நடன்னா என்னடா அர்த்தம்’ என்று ஒரு கட்டத்தில் பொங்கியிருக்கிறார். ஆனால் அசரவில்லை இயக்குநர். மொத்தப் படப்பிடிப்பும் இப்படியே நடந்து முடிகிறது.