அதிமுக vs பாஜக


தமிழ்நாடு அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த சிலர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் அங்கும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக கொரோனா வைரஸ் நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் என்ற அளவில் பதிவாகிவரும் போது எப்படி இவ்வாறு கேட்கலாம், இது போன்று மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பினார் நீதிபதி.
அரசு தடை விதித்துள்ள நிலையில் நீதிமன்றமும் கொரோனா பரவிவிடக் கூடாது என்பதற்காக அனுமதியளிக்க மறுத்துள்ள நிலையில் பாஜக தேசிய செயலர் தன் பாணியில் விமர்சனத்தை தொடுத்துள்ளார். “கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கொண்டாடலாம், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலேயே சிலைகளை பொது இடங்களில் நிறுவுவதற்கும், ஊர்வலம் சென்று நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் மட்டுமே தடை என அரசு தெளிவாக கூறியுள்ளது. இதற்கு மட்டுமல்லாமல் அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளும் கடந்த ஐந்து மாதங்களாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆடி தபசு, ஆடி அமாவாசை, மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா என ஒவ்வொரு ஊரிலும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்து மத நிகழ்ச்சிகளுக்கும் கடந்த சில மாதங்களில் மக்கள் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. அப்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத பாஜக, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் விநாயகர் சதுர்த்தியை மட்டும் ஏன் இந்த அளவு தூக்கிப்பிடிக்கின்றன என்று கேள்விகள் எழுகின்றன.