‘ஆன்லைன்’ வகுப்புகளை குறைக்க வேண்டும் – ஐகோர்ட்டு கருத்து

Advertisements
சென்னை,

கொரோனா ஊரடங்கினால் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு, ‘ஆன்லைன்’ மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த ‘ஆன்லைன்’ வகுப்புக்குள் நுழையும்போது ஆபாச இணையதளங்கள் குறுக்கிடுவதாகவும், இதை தடுக்க விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும், ‘ஆன்லைன்’ வகுப்புகளினால் குழந்தைகளின் விழித்திரைகள் பாதிக்கப்படுவதாகவும் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் பல தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒரு மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, “ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளன. ஆனால், ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை. நாள் முழுவதும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாது. ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசால், ஆபாச இணையதளங்களை தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை” என்று வாதிட்டார்.

மற்றொரு மனுதாரர் தரப்பு வக்கீல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “ஆன்லைன் வகுப்புகளை தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்டிரானிக் சாதனங்களில் பார்ப்பதால் மாணவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற கண் நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது என்று அரசு கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த கல்வி முறையால் கிராமபுற மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் இருப்பது சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது. கிராமபுறங்களிலும் 100-க்கு 44 சதவீதம் பேரிடமும், நகரங்களில் 65 சதவீதம் பேரிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளதால் ஆன்லைன் கல்வி அனைவருக்கும் சென்று சேருவதில்லை. நான்கு மணி நேர வகுப்புகள் நடத்தினாலும், அதன் பின் வழங்கப்படும் வீட்டு பாடங்களும், கம்ப்யூட்டர் மூலமே மாணவர்கள் செய்கின்றனர். எனவே அரசு பள்ளிகளை போல தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த வேண்டும்” என்று வாதிட்டார்.

இதனை கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு இது சாத்தியமில்லை என்று கருத்து தெரிவித்தனர். அதேநேரம், “மாணவர்களுக்கு பாதிப்பு என்றால், வகுப்புகளை குறைக்க வேண்டும். வீட்டுப்பாடத்தையும், பாடத்திட்டத்தையும் குறைக்க வேண்டும்” என்று கூறியநீதிபதிகள், விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


You may also like...