கூட்டு பிரார்த்தனை – ரஜினிகாந்த், விஜய், சூர்யா, இளையராஜா பங்கேற்பு

Advertisements

சென்னை,

 

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி திரை உலகினர் அவரவர் வீட்டிலேயே பங்கேற்கும் கூட்டு பிரார்த்தனைக்கு நேற்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தும் அறிக்கை மூலம் “பாடும் நிலா பாலு. எழுந்து வா, கூட்டு பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பியை மீட்டெடுப்போம்” என்று அழைப்பு விடுத்து இருந்தார்.

அதன்படி, நேற்று மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி தொடங்கியது. ஜூம் செயலியில் நடந்த பிரார்த்தனையில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, சத்யராஜ், மனோபாலா, நடிகை சரோஜாதேவி, இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதமன், இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய, “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலையும் ஒலிக்க விட்டனர்.

நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, சிவகுமார், டி.ராஜேந்தர், தனுஷ், சிம்பு, பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, விவேக், நடிகைகள் குஷ்பு, ராதிகா சரத்குமார், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஜி.வி.பிரகாஷ், தீனா, கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் சீமான், லிங்குசாமி, கே.எஸ். ரவிக்குமார், அமீர், சேரன், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், நாஞ்சில் அன்பழகன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, அபிராமி ராமநாதன் மற்றும் பல நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், பாடகர்கள் அவரவர் வீடுகளில் பிரார்த்தனை செய்தனர்.

ரசிகர்கள், தங்கள் வீட்டின் வாசலிலும், மாடியிலும் நின்று பிரார்த்தனை செய்தார்கள். இதுபோல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரி முன்பும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ஆயிரம் நிலவே வா, பொட்டு வைத்த முகமோ, இயற்கை எனும் இளைய கன்னி, நந்தா என் நிலா, மண்ணில் இந்த காதல் இன்றி, இளைய நிலா பொழிகிறதே, நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள், காதலில் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில், கல்யாண மாலை, கடவுள் அமைத்து வைத்த மேடை, ராகங்கள் பதினாறு, வான் நிலா நிலா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், எங்கேயும் எப்போதும், சங்கீத மேகம், வான் உயர்ந்த சோலையிலே, சங்கரா நாதஸ லீலா ஹரா, இது குழந்தை பாடும் தாலாட்டு, ஆஹா வந்திருச்சி ஆசையில் ஓடி வந்தேன், சிப்பி இருக்குது முத்து இருக்குது, இளமை இதோ இதோ, நானாக நானில்லை தாயே உள்பட பல பாடல்களை ஒலிக்கச் செய்தும் அவரது உருவப்படத்தை ஏந்தியும் பிரார்த்தனை செய்தனர்.

You may also like...