அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி

Advertisements

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விரும்பியபடி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஓபிஎஸ்! மேம்போக்காக பார்க்கும்போது பன்னீர்செல்வம் கோரிக்கைக்கு எடப்பாடி தரப்பு இசைந்து விட்டது என்றுதான் தோன்றும்.

ஆனால், கட்சியிலும் ஆட்சியிலும், எடப்பாடி பழனிச்சாமியின் கைகள் ஓங்கி விட்டன என்பதுதான் உண்மையான அர்த்தம் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் அடுத்த தேர்தலிலும் முதல்வராக இருப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்தான் திடீரென போஸ்டர் யுத்தம் ஆரம்பித்தது.

அதிமுக முதல்வர் வேட்பாளர்: புலியாட்டம்… குத்தாட்டம் – திருவிழா கோலமான ராயபேட்டை போஸ்டர் யுத்தம் ஜெயலலிதா வழிகாட்டிய ஓ.பன்னீர்செல்வம்தான் அடுத்த முதல்வர் என்று தேனி மாவட்டத்தில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட வேகத்தில் கிழிக்கப்பட்டது. இதனால் கொதித்து எழுந்தார் ஓபிஎஸ். இதையடுத்து அவரது இல்லத்திற்கும், முதல்வர் இல்லத்திற்கும், 3 முறை அமைச்சர்கள் சென்று ஆலோசனை நடத்த வேண்டிய நிலை உருவானது.

பரபரப்பு ஏற்படுத்திய ஓபிஎஸ் அன்று முதல் இன்று வரை அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீடித்தது. இதற்கிடையே கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அக்டோபர் 7ம் தேதி முதல்வர் யார் என்பதை அறிவிக்கப்படும் என்று தடாலடியாக ஒரு அறிவிப்பு வெளியானது. இதன்பிறகு பரபரப்பு இன்னும் உச்சத்துக்குச் சென்றது.

எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓ பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் தனது பண்ணை வீட்டுக்கு சென்று அமர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் ஓபிஎஸ் கை ஓங்குவது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது. அவர் 7ம் தேதி சென்னை வருவாரா இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

தர்ம யுத்தம் என்ற பெயரில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பிறகு பன்னீர்செல்வம் மீண்டும் மிகப்பெரிய லைம் லைட்டுக்கு வந்தார். யார் வெற்றி பெற்றார்கள்? இந்த நிலையில்தான், அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் 2021 ஆம் ஆண்டில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அதேநேரம் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் இருக்கிறார். இப்போது 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறி உள்ளதால் மறைமுக யுத்தத்தில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றுவிட்டார் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அரசியல் விமர்சகர்கள் பார்வை வேறாக உள்ளது. அவர்கள் கூறியதாவது.

3 வருடம் கழிந்துவிட்டது 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இணைக்கப்பட்ட போது ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என்பது பன்னீர்செல்வத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அது கண்டு கொள்ளப்படவில்லை. இப்போது முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் எடப்பாடி தரப்பு இறங்கி வந்து 11 பேர் கொண்ட குழுவிற்கு ஓகே சொல்லியுள்ளது. ஒரு பாதிப்பில்லாத கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு கூட பன்னீர் செல்வத்திற்கு சுமார் மூன்று ஆண்டுகாலம் பிடித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வேட்பாளர் தேர்வு.. நிர்வாகிகள் நியமனம்.. உள்ளிட்டவற்றில் அதிகாரம் கொண்ட அமைப்பாக வழிகாட்டு குழு இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரம் குறைந்து விட்டதாக கருத முடியாது. ஏனெனில் 11 பேரில் 6 பேர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள். இந்த குழு ஒரு முடிவு எடுக்கும்போது பெரும்பான்மை ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அந்த முடிவு செல்லுபடியாகும். எனவே எடப்பாடி எதை விரும்புகிறாரோ அதை இந்த குழு செய்யப்போகிறது.

இதில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதாக எப்படி கூற முடியும்? எடப்பாடியாருக்கு வெற்றி பன்னீர்செல்வம் எந்தவிதமான போட்டியும் போடாமல் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவதற்கு ஓகே சொன்னார் என்ற பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக குழு என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து அந்த குழு அமைக்கப்பட்டது. ஏற்கனவே முடிவு செய்தபடி எடப்பாடியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தாகிவிட்டது.

சசிகலா ரிலீஸ் மேலும் சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பிறகு அதிமுகவில் நிலைமை மாறக்கூடும். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்பதெல்லாம் இப்போது தொண்டர்களை தேர்தலுக்கு ஆயத்தப்படுத்துவதற்கு மட்டுமே உதவக் கூடும் என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். எனவே ஜனவரி மாதத்திற்கு பிறகு, கச்சேரி களைகட்டும் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com