தீபாவளிக்கு 700 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டம்

Advertisements

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ஒருமாதமே உள்ளநிலையில், தற்போது 700 சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் முன்பதிவை பொறுத்து அதிகளவு பஸ்கள் இயக்கப்படும் என்று விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

தமிழகஅரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் 300 கி.மீக்கு அதிகமான தொலைவுள்ள இடங்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சொகுசு, ஏசி பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு அதிக பஸ்கள் இயக்கப்படும்.

தற்போது 1,100 பஸ்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். கொரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தற்போதைய நிலவரப்படி 450 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. அப்போது ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி 700 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளோம். மேலும் அனைத்து விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்தும் அறிக்கை கேட்டுள்ளோம்.

அதன்படி சிறப்பு பஸ்கள் தேவை குறித்து அவர்கள் தங்களது அறிக்கையை சமர்பிப்பார்கள். அதன் அடிப்படையில் வரும் வாரத்தில் ஆலோசனை நடத்தப்படும். இதில் அனைத்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள். அப்போது, எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைள் என்ன என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

பிறகு போக்குவரத்துத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு இம்மாத இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com