மறைந்தார் ‘மக்கள் போராளி’ ட்ராபிக் இராமசாமி – ஆர்.கே.

Advertisements

 

சுய நலமிக்க அரசியல் களத்தில், தன் நலம் பாராது மக்களுக்காக, மக்கள் பிரச்னைகளுக்காக நீதிமன்றங்களில் போராடி பல தீர்வுகளை பெற்றுத் தந்த மக்கள் போராளி கே.ஆர். ட்ராபிக் இராமசாமி நேற்று தன்னுயிர் நீத்தார். சென்னை இராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல் நலக்குறைபாட்டிற்காக சிகிக்சை பெற்று வந்தார்.  அன்னாரின் இழப்பு வெகு சாதாரணமான மக்களுக்கு ஒரு பேரிழப்பு. அவருக்கு வயது  88.

அரசின் மற்றும் சமூக விரோத கும்பல்களின் செயல்களை தட்டிக் கேட்டும் திறன் அற்ற சாமானியன் தன் இயலாமையை, ஆற்றாமையை யாரிடம் சொல்வது, எப்படி தீர்வை பெறுவது  என்று திகைத்திருந்த நேரத்தில், ஆகாயத்தில் உதித்த நட்சத்திரமாய், களத்தில் இறங்கி மக்களுக்காக போராடியவர் இராமசாமி.  தனது பணி ஒய்வுக்குப் பின்  சென்னை பாரிமுனையில் ட்ராபிக் போலீசுக்கு உதவியாக பொது போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரின் சேவையை பாராட்டி சென்னை போலீஸ் அவருக்கு அடையாள அட்டை வழங்கயிது. அது முதல் அவர் ட்ராபிக் இராமசாமி என அழைக்கப்பட்டார். எண்ணற்ற  பொது பிரச்னைகளுக்கு நீதிமன்றங்களின் கதவை தட்டி, நீதி பெற்றுத்  தந்தவர். சமூக விரோத அரசியல்வாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர். உயர் நீதிமன்றம்,  உச்ச நீதிமன்றம் என்று அத்தனை பொதுநல வழக்குகளில், தன் அர்பணிப்பான உழைப்பையும், உறுதிப்பாட்டையும் மக்களுக்கு அளித்து, யார் இந்த மனிதன் என்ற  அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறில்  1934 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி பிறந்தார்.  ஆரம்ப காலத்தில் இவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்களால் சம்பத் என்று அழைக்ப்பட்டார். 1952 ஆம் ஆண்டு  முதலமைச்சர் இராஜகோபாலச்சாரியாருடன் இணைந்து அரசியல் பணிகளை செய்தார். இராஜகோபாலச்சாரியாரை தன் குருவாக கொண்டவர். பின்னாளில் தன்னை பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு மக்கள் தொண்டனாக மாற்றிக் கொண்டார். எந்த அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாமல் தனி மனிதனாக, அரசங்கம் மற்றும் தனி நபர்கள் செய்யும் சமூக விரோத செயல்களை தட்டிக் கேட்டு, நீதி மன்றம் சென்று பொது அமைதிக்கும், நல்வாழ்விற்கும் ஆதரவாக நின்றார்.

இவரின் தொடர் முயற்சியால் சென்னையில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் நீதி மன்ற உத்தரவின் பெயரில் இடிக்கப்பட்டன. இதன் மூலம் பொது போக்குவரத்துக்கு இடைஞ்சல்கள் குறைந்தன. மேலும் ஆட்சியாளர்களின் படாடோபமான விளம்பர பலகைகளுக்கு எதிராக போராடி, அவற்றின் மேல் நீதிமன்றகங்கள் உத்தரவிடும் நிலையை உண்டாக்கினார். ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து நீதிமன்றத்தால் குற்றவாளிக கூறுப்பட்டவருக்கு எதற்கு நினைவிடம் என்று கேள்வி எழுப்பினார்.

இவர் பலமுறை சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதால்,   இவர்  குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.  இவருக்கு   நீதிமன்றம்  போலீஸ் பாதுகாப்பு கொடுக்க சொன்னதின் பேரில்,  இவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

எதற்க்கும் அஞ்சாதவர், யாரோடும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் மக்களுக்காகவும், தனக்கு  சரியென்று தோன்றியதை சட்டபூர்வமாக பெற்று தருவதில் இறுதிவரை மனம் தளராமால் போராடி வந்தார்.  வெகு சாமானியனுக்கு இவர் துணையாக வரும் இராம’சாமி’யாக இருந்தார்.  அன்னாரின் இறப்பு மக்களின் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. காலம் யாரையும் விட்டு வைக்காது என்பது நிதர்சனம். அதில் ட்ராபிகாரும் சேர்ந்துவிட்டார். இருந்த போதும் அவர் என்றும் போராடும் மக்களுக்கும், போராளிகளுக்கும் ஒரு உத்வேகமாகவும், ஒரு கிரியா ஊக்கியாகவும்  என்றும் மக்கள் மனதிலும், போராட்டக்காரர்கள்  மனதிலும்   வாழ்ந்து  கொண்டே இருப்பார்.   அவரின்  லட்சியங்கள்,  கனவுகள் ஈடேறட்டும்.

You may also like...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com